த.தே.கூ. 13 அம்ச கோரிக்கை இன நல்லிணக்கத்துக்கு பாதகம் | தினகரன்


த.தே.கூ. 13 அம்ச கோரிக்கை இன நல்லிணக்கத்துக்கு பாதகம்

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 5தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 13அம்சக் கோரிக்கை நாட்டில் இன நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்கும் பாதகமானதாகவே அமையும் என பொதுஜன பெறமுன எம்.பி. பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக் கோரிக்கைகள் நாடு பிளவுபடவும், இன நல்லுறவு சீர்குலையவும் நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடச் செய்வதற்குமே வழி வகுக்கும். இத்தகைய கோரிக்கையை வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஒருபோதும் ஏற்கமாட்டார் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13அம்சக் கோரிக்கை தொடர்பில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

ரயில் சிலிப்பர் கட்டைகள், ரயில் தண்டவாளங்களை புலிகள் பதுங்கு குழி அமைக்க பயன்படுத்தினர். எனினும் அன்றைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவிடமிருந்து நிதியுதவி பெற்று வடக்கிற்கான ரயில் பாதைகளை நிர்மாணித்து வடக்கிற்கு ரயில் சேவையை ஆரம்பித்தது.

இருளில் மூழ்கியிருந்த வடக்கிற்கு மின்சாரம் பெற்றுக் கொடுத்ததும், வீதிகளை நிர்மாணித்ததும், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மஹிந்த அரசாங்கமே பெற்றுக் கொடுத்தது. எனினும் கடந்த நான்கரை ஆண்டுகளாக வடக்கிற்கு நடந்தது என்ன என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதின் மூன்று அம்சக் கோரிக்கையானது வடக்கு, கிழக்கை இணைத்து சுயநிர்ணய உரிமை பெற்றுக் கொள்வதாகவே உள்ளது. கிழக்கின் சிறந்த கடல் வளம், மன்னாரில் எண்ணெய் அகழ்வுப் பிரதேசம் உள்ளிட்டவைகள் நாட்டின் சொத்து.

இதை நாட்டின் சகல மக்களும் அனுபவிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்,  எம்.எஸ்.பாஹிம்

 


Add new comment

Or log in with...