தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவு | தினகரன்


தபால் மூல வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் சுமுகமாக நடைபெற்றது.

மூன்று கட்டங்களாக நடைபெற்ற தபால்மூல வாக்குப் பதிவுகள் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச சேவையாளர்கள் கடந்த 31ஆம், 1ஆம் திகதிகளில் தமது தபால்மூல வாக்குகளை நாடளாவிய ரீதியில் பதிவுசெய்திருந்தனர். 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் தேர்தல் செயலகத்தின் அதிகாரிகள் வாக்குகளை பதிவுசெய்திருந்தனர்.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் வாக்களிக்க முடியாதவர்களுக்கே நேற்று 7ஆம் திகதி மாவட்ட செயலகங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியது.

தேர்தல்கள் செயலக அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், கபே மற்றும் பெப்ரல் அமைப்பின் அதிகாரிகள் என ஒட்டுமொத்தமாக 40ஆயிரம் முதல் 50ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன், தபால் மூல வாக்களிப்புக்காக நாடளாவிய ரீதியில் 7,920 வாக்களிப்பு நிலையங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அமைத்திருந்தது. இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக 6,59,515 பேர் தகுதி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...