Saturday, April 20, 2024
Home » யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 76

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 76

by damith
February 19, 2024 12:13 pm 0 comment

கஷ்ட காலங்களில் மனிதன் வீணாக கலங்கியும், அமைதியின்றியும் தனது ஆற்றலை வீணடித்து விடுகிறான். அவ்வாறு அவன் வீணடிக்கும் ஆற்றலின் ஒரு பகுதியை நிதானமாக அமைதியுடன் சிந்தித்து செயலாற்றினால் எவ்வளவு பெரிய துன்பத்திலிருந்தும் மிக எளிதாக அவன் வெளிவர முடியும். துன்பம் வந்ததும் துவண்டு விடக்கூடாது. துன்பத்தை வெல்லும் வழியை யோசிக்காமல், துவண்டு போய் தம் திறமைகளை வீணாக்கக் கூடாது. எதிர்கொள்ள வேண்டிய கடமைகளை ஆற்றாமல், என்ன செய்வது’, ‘எங்க போவது ‘எப்படி தப்பிப்பது’ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தால் நமக்கு வந்த சிறு துன்பம் கூட நூறு மடங்கு வளர்ந்து விடும். வாழ்க்கையில் வரும் இன்ப-துன்பங்களை நடுநிலை உணர்வுடனும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இன்ப துன்பங்களை நம் வாழ்க்கைப் பாதையில் கடந்து செல்லும் பாதசாரிகளைப் போல் பாவிக்க வேண்டும். அவைகள் எவ்விதத்திலும் நமக்கு சம்பந்தமில்லாதவை என்று உணர வேண்டும்.

அமைதியான மனமும். பேதலிக்காத அறிவும் மனிதனின் இரு பெரும் சக்திகளாகும். இவை இரண்டின் உதவியைக் கொண்டு பெரும் இக்கட்டான சூழ்நிலையைக் கூட நாம் எதிர்கொள்ள முடியும். துன்பங்கள் வரலாம், போகலாம். சூழ்நிலைகள் மாறலாம். வாழ்க்கையை சுகமானதாக ஆக்கவும். திருப்திகரமாக அமைப்பதற்கும் மனிதன் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் ஆற்றலை வீணடிக்கக் கூடாது. பரந்து விரிந்து கிடக்கும் ஆசைகளில். நல்லெண்ணங்கள் மட்டுமே விருப்பம் என்கிற வரையறைக்குள் வருகின்றன. நல்லெண்ணங்களால் உருவாகும் நல்ல விருப்பங்கள் அபரிதமான சக்தி உடையவையாகும். நற்காரியம் செய்ய விரும்பும் அல்லது மேன்மையான லட்சியத்தை அடைய விரும்பும் ஒருவன், தனக்கெதிராக லட்சக்கணக்கான விரோதிகள் வந்தாலும், பலவித அசௌகர்யங்கள் உண்டானாலும், தான் கொண்ட குறிக்கோளில் வெற்றி அடைந்தே தீருவான்.

நல்ல எண்ணம் கொண்டவன். தான் கொண்ட குறிக்கோள் வெற்றியடைய வேண்டும் என்ற முயற்சியில் இடைவிடாது. தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பான். தன் குறிக்கோளும், முயற்சியும் ஒன்று சேரும் போது அவனிடம் ஓர் ஆன்மீக ஊற்று உருவாகி, அதன் மூலம் தன் லட்சியத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஒவ்வொரு நொடியும் முன்னேறிக் கொண்டே இருப்பான். நல்ல விருப்பங்களை கொண்ட மனிதனிடம் நம்பிக்கை. உற்சாகம், துணிவு, செயலாற்றும் தன்மை ஆகியவைகளுக்கு குறைவிருக்காது. வெற்றி பெறுவதற்கான குணங்கள் அவனிடம் நிறைந்திருக்கும். தோல்வி என்பதே அவனை நெருங்காது. தீய எண்ணம் கொண்டவனின் விருப்பம், நஞ்சு போல் நம் சக்தியினை அழித்து விடும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT