என் மீது வீண்பழி சுமத்திய இலத்திரனியல் ஊடகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை | தினகரன்


என் மீது வீண்பழி சுமத்திய இலத்திரனியல் ஊடகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தன்மீது சேறு பூசும் ஊடக கலாசாரமொன்றை முன்னெடுத்து வரும் தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்தார்.

ஊடகத்துறையுடன் சம்பந்தப்படாத ஒரு நபரை வைத்து அந்தத்துறைக்கே களங்கமேற்படுத்தும் அருவருக்கத்தக்க அரசியல் வியாபாரம் நடத்தும் இந்த தனியார் ஊடகம் அதன் வழமையான சேறு பூசும் கலாசாரத்தை தன்மீது திருப்பியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தலைமை தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில், இந்த தனியார் ஊடக நிறுவனம் கடைப்பிடிக்கும் ஊடக தர்மம் இதுதானா?.

எமது பக்க நியாயத்தைக் கூட மக்களுக்கு சொல்ல வாய்ப்புத்தரக் கூட தயாராக இல்லை. இந்த சேறு பூசும் நாடகத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிஸ்புல்லாஹ் செயற்படுவதாக ரிஷான் மஃரூப் என்ற நபர் தெரிவித்தார்.

என்மீது பூசிய சேற்றைக் கழுவி தூய்மைப்படுத்துவதற்கு இந் நபர் என்னிடம் ஒரு கோடி ரூபா பேரம் பேசிய ஒலி, ஒளி நாடா என்வசம் இருக்கிறது. அதன் பிரதிகளை ஊடகங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறேன்.

ரிஷான் மஃரூப் என்ற இந் நபர் முன்னொருபோதும் கண்டறியப்படாத ஒருவராவார். அவருக்கும் ஊடகத்துறைக்கும் தொடர்பிருப்பதாகக்கூட அறிய முடியவில்லை. ஊடகத்துறைக்கே களங்கத்தை தோற்றுவிப்பதற்காக ஹிஸ்புல்லாஹ் தேடிப்பிடித்த நபர்தான் இந்த ரிஷான் மஃரூப். இதனை அவரது வாயாலேயே சொல்லியுள்ளார்.

நான் ஊடகத்துறையை மதிப்பவன். உங்களில் யாருக்காவது என்மீது சந்தேகம் இருக்கின்றதா?. என்மீது சேறு பூசிய அந்த இலத்திரனியல் ஊடகம் இந்த ஊடகச் சந்திப்பைக்கூட ஒளிப்பதிவு செய்ய வந்துள்ளது. தாராளமாக எடுத்துச்சென்று எனது பதிலையாவது மக்களுக்குக் காண்பியுங்கள்.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட அந்த ஊடக நிறுவனம், சேறுபூசி பணம் தேடிய ரிஷான் மஃரூப் இருவருக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளேன். எனது பொறுமையை பலவீனமாகக் கருதினால் நானும் உரிய பதிலைக் கொடுக்காமலிருக்க முடியாது என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்


Add new comment

Or log in with...