புலவர்களின் கவித் திறத்தையும் சோதிக்கும் பசி உணர்வு | தினகரன்


புலவர்களின் கவித் திறத்தையும் சோதிக்கும் பசி உணர்வு

"தம்பி சோறு எங்கே விக்கும்?' "சோறு தொண்டையில் தான் விக்கும்” புலவரே

பசியிலும் கவித்திறன் குன்றாத பெருமை பாரதிக்கே!

உண்ட உணவு செரித்த பின்பே மீண்டும் உணவு உண்டால் உடம்புக்கு மருந்து வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர்.

திருமூலரோ, உடம்பை வளர்த்து, உயிர் இயங்கி, அதன் பலனாக மெய்ஞானத்தை அடைய வேண்டும். அதற்கு உடம்பே அடிப்படை என்பதை "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்' என்ற பாடலில் விளக்குகிறார். உடலுக்கு உணவே ஆதாரம் என்பது இப்பாட்டின் மறைபொருள்.

பத்து விரல்களால் பாடுபட்டு ஐந்து விரல்களால் அள்ளிச் சாப்பிட வேண்டும் என்பது உழைப்பையும் உணவையும் நேரடியாகக் குறிக்கும் சொலவடை.

இவ்வாறு எண்ணறக் கற்று எழுத்தற வாசித்த புலவர் பெருமக்கள் முதல் பாமரர்கள் வரை பசி குறித்தும் உணவு குறித்தும் பல்வேறு பாடல்களையும், கருத்துகளையும் இதுகாறும் பகிர்ந்து வந்துள்ளனர்.

 மானிடராகப் பிறந்த அனைவருக்குமே பசிப்பிணி பொதுவானதுதான். ஆயினும் பசி நேரத்தில் தோன்றும் உணர்வுகளும் கருத்துகளும் புலவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு அவர்தம் கவித் திறத்தை சோதிக்கிறது.   சிலேடைக் கவியான காளமேகப் புலவர் ஒரு சமயம் நாகை வீதியில் பசியுடன் நடந்து செல்கிறார். அங்கே வீதியில் பாக்குக் கொட்டைகளைப் பரப்பி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களிடம்,

"தம்பி சோறு எங்கே விக்கும்?' என பேச்சு மொழியில் வினவுகிறார்.

"சோறு எப்போதுமே தொண்டையில்தான் விக்கும் புலவரே' என சிறுவர்கள் நகைச்சுவையாக பதில் கூறுகின்றனர்.

பசியுடன் இருந்த காளமேகத்துக்கு சிறுவர்களின் அலட்சியமான பதிலைக் கேட்டு சினம் பொங்க, தெருச் சுவரில் கரித்துண்டுகளால் ஒரு பாட்டு எழுதுகிறார்.

"பாக்கு தெறித்து விளையாடும் பாலருக்கு நாக்கு...' என்று எழுதிய புலவருக்குப் பசியுணர்வு மேலிட அதற்கு மேல் யோசிக்க இயலவில்லை. உணவு உண்ட பிற்பாடு பாட்டை நிறைவு செய்யலாம் எனச் சென்று விட்டார்.

 காளமேகப் புலவர் எழுதிய பாட்டைக் கவனித்த சிறுவர்கள்,

  "பாக்கு தெறித்து விளையாடும் பாலருக்கு

நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை'

  எனப் பாடலை நிறைவு செய்து எழுதினர்.

 பசியாறிவிட்டு வந்த புலவர், "பாக்கு தெறித்து விளையாடும் பாலருக்கு நாக்கு தெறிக்க...' என எழுத நினைத்திருந்தார்.

ஆனால், பாடலை ஏற்கனவே மிக நேர்த்தியான பொருளுடன் நிறைவு செய்திருந்த சிறுவர்களை வியந்து போற்றினார்.

"ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்'

  என உணவை ஏற்கும் வயிறு குறித்து எளிமையாய், மிகத் தெளிவாய் பாடியுள்ள ஒளவையாரும் பசி நேரத்தில் தனது புலமையில் சற்று தடுமாறித்தான் போயிருக்கிறார்.

இதை, மாடு மேய்க்கும் சிறுவன் கேட்ட "சுட்ட பழமா? சுடாத பழமா?' நிகழ்ச்சி எடுத்துரைக்கும்.  சிறுவனின் மதி நுட்பத்தை வியந்தும், சிறுவனிடம் தாம் தோற்றுவிட்டதை எண்ணியும் வருந்திய ஒளவை, "கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி' என மாடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்றதால் இரண்டு இரவுகள் தமக்குத் தூக்கம் கொள்ளாது எனப் பாடுகிறார்.   புதுச்சேரியில் மகாகவி பாரதியார் குடும்பத்துடன் வசித்து வந்த நேரம். கடந்த மாத கடன் பாக்கி இருப்பதால் பால் தரமுடியாது என பால்காரன் செல்லம்மாவிடம் கூறுகிறான்.

 இந்த மாதம் பாக்கியை தருவதாகப் பால்காரனை சமாதானப்படுத்தி செல்லம்மா அனுப்பி வைக்கிறார்.

சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அன்றைய தினம் எழுதயிருந்த கட்டுரையை அனுப்பினால் அதற்கான சன்மானத் தொகை கிடைக்கும் என செல்லம்மா நினைக்கிறார்.

 பேனா, காகிதம், மை குப்பி என அனைத்தையும் மேசை மீது எடுத்து வைத்து கட்டுரை எழுதுமாறு பாரதியாரிடம் கூறிவிட்டு அன்று சமைப்பதற்காகச் சிறிதளவே இருந்த அரிசியை முறத்தில் போட்டு அதில் கல்லைப் பொறுக்கிக்கொண்டிருந்த அவர், ஏதோ வேலையாகக் கீழே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறார்.

 பாரதியாருக்கோ கட்டுரை எழுத மனம் லயிக்கவில்லை. முறத்தில் இருந்த அரிசியை வீட்டு முற்றத்தில் இறைத்துவிட்டு அதைத் தின்று பசியாறும் பறவைகளைக் கண்டு ரசிக்கிறார்.

"காக்கைக் குருவி எங்கள்

ஜாதி-நீள்   கடலும் மலையும்

எங்கள் கூட்டம்   நோக்குந்

திசையெலாம் நாமன்றி

வேறில்லை   நோக்க

நோக்கக் களியாட்டம்'

  எனக் கவிதை எழுதினார்.

வறுமையுற்ற காலத்திலும் தம் பசி, உணவு, வறுமை குறித்து கவலை கொள்ளாமல் எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று வாழ்ந்த மகாகவி ஏனைய பிற புலவர்களைவிட பசி குறித்து கவலை கொள்ளாமல் கவித்திறம் குன்றாமல் வாழ்ந்தார் என்பது பெருவியப்புக்குரியது.

இரா.சுந்தரபாண்டியன்


Add new comment

Or log in with...