வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ புயல் தீவிரம் | தினகரன்


வங்கக் கடலில் உருவான ‘புல்புல்’ புயல் தீவிரம்

வட அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘புல்புல்’ புயல் அடுத்த சில மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாறும் என தெரிவிக்கப்படுகிறது. அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘புல்புல்‘ புயல் தீவிர புயலாக மாறுகிறது.

புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்திகதி தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடல் பகுதியில் உருவான புயலின் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டதால் கடந்த 3 நாட்களாக மழை குறைந்து விட்டது.

இந்த நிலையில் தாய்லாந்து கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்தது.

அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயர் சூட்டினர்.

இந்த புயலினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இப்போது தீவிர புயலாக மாறி வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-

வட அந்தமான் கடல் பகுதியில் உருவான ‘புல்புல்’ புயல் அடுத்த சில மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாறும். இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

ஆனாலும் தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...