கூடிய விரைவில் தேர்தல்; ஊழல் மோசடிகாரர்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை | தினகரன்


கூடிய விரைவில் தேர்தல்; ஊழல் மோசடிகாரர்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை

பெரும்பான்மை நம்பகத்தன்மை பெற்றவர் பிரதமராக வருவார்

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை நம்பகத்தன்மையை பெற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை புதிய பிரதமராக நியமிப்பதுடன் கூடிய விரைவில் பொதுத் தேர்தலையும் நடத்தி ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கையெடுப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஊழல் - மோசடி குற்றச்சாட்டு உள்ளாகியுள்ள எவரையும் எனது அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு நேற்று விசேட உரையொன்றை தொலைக்காட்சியில் நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு கூறினார்.மேலும் கூறுகையில்,

ஊழல் - மோசடிமிக்க ஆட்சிக்கு பதிலாக இளைய மற்றும் திறன், நிபுணத்துவமிக்க தூய்மையான அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவேன். அதற்காக பாரிய மற்றும் நேரடி தீர்மானங்களை எடுக்க தயாராகவுள்ளேன். நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டது பாராளுமன்றத்தின் நம்பகத்தன்மையை பெற்றுக்கொள்ளக் கூடிய புதிய பிரதமரை நியமிப்பேன். எனது அமைச்சரவையில் ஊழல் - மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள எவரையும் இணைத்துக்கொள்ள மாட்டேன். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு கூடிய விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கையெடுப்பேன்.

தேசியப் பட்டியல் மூலம் பெண்களுக்கும் தொழில்வாண்மை மிக்க கற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். பொதுத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்துவரும் மாகாண சபைத் தேர்தல்களில் புதிய இளம் வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும். இந்த இரண்டு தேர்தல்களிலும் பெண்களுக்கு உரிய இடத்தையும் கொடுப்போம்.

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான செயற்பாட்டை பாராளுமன்றத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாது மக்களிடம் அதனைக் கொண்டுசென்று மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் தாம் இலங்கை பிரஜை என்ற உணர்வு ஏற்படக்கூடிய அரசியலமைப்பையே உருவாக்குவேன் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...