சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவு | தினகரன்


சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவு

சகல மக்களும் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டுகோள்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன் அன்னம் சின்னத்துக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் கடந்தகால அரசியல் செயற்பாடுகளை ஆய்வுக்குட்படுத்தியே இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (புெளாட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் மத்திய செயற்குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களுக்கிடையிலேயே போட்டி நிலவுகிறது. புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் செல்லக்கூடிய அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு எதிரானவராக இருக்க வேண்டும் என்பதுடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை மற்றும் சேவைத்துறை, அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீது உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும் இருக்க வேண்டும்.

அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரஜைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது உறுதியளிப்பவராக இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப் பெரும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது சிறந்தது என்பது பற்றி நன்கு சிந்தித்து சரியான ஒரு கணிப்பை மேற்கொள்வது வாக்காளரின் கடமையாகும். இக் கணிப்பில் விடும் ஒரு தவறு ஆபத்தான விளைவுகளுக்கு இட்டுச்செல்லக்கூடும். முதலிரு வேட்பாளர்களும் ஆட்சியில் அண்மைக் காலங்களில் ஆட்சியிலிருந்த அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுடைய கடந்தகால செயற்பாடுகள் பற்றி எமக்குத் தெரியும். அதன் அடிப்படையில் பொருத்தமான கணிப்பொன்றை நாம் மேற்கொள்ள முடியும்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர்களோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்கள் ஆகியோரின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாகும்.

அரசியலமைப்பிற்கான 17ஆவது திருத்தத்தை நீக்கியமை, அரசியலமைப்பிற்கான 18ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை, அந்த நோக்கத்திற்காக சட்டவாக்கச் சபையான பாராளுமன்றத்தை ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்புப் பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித்துறை ஆகியவற்றிற்கான அனைத்து உயர் நியமனங்களும் முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைய மேற்கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசருக்கெதிரான குற்றப் பிரேரணை மற்றும் அற்ப குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் இராணுவத் தளபதிக்கெதிராக வழக்குத் தொடுத்தமை ஆகியன அந்த ஆட்சியின் எதேச்சதிகார மற்றும் தான்தோன்றித்தனமான தன்மையை உறுதிப்படுத்தின.

அப்போதைய ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட்டது. இது, சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்கான திடசங்கற்பத்தை எடுத்துக் காட்டியது. இயங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தைப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையொன்று இல்லாது, அரசியலமைப்பிற்கு முரணான ஓர் அரசாங்கத்தின் வாயிலாக 2018 ஒக்டோபர் மாதம் நீக்கப்பட்டது. ஆனால், எமது உயரிய நீதித்துறைச் சுதந்திரத்தின் காரணமாக நாடு பேராபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு - இலங்கைத் தமிழரசுக் கட்சியும் எவ்வித அழுத்தங்களுக்கும் அடி பணியாது ஜனநாயகத்திற்காகப் பாராளுமன்றத்தில் உறுதியாக நின்றது.

பத்திரிகையாளர்கள், குடிமக்கள், மாணவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் ஆகிய எமது இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் படுகொலைகளும், காணாமற்போதலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டமையை எடுத்துக் காட்டுகின்றன.

வெள்ளை வேன் பீதி நன்கு நினைவிலுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட முழுமையான ஒத்துழைப்பு இருந்தும், ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளைக் கைவிட்டு மக்கள் முரண்பாட்டையும் ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தியது.

ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதற்கான தற்போதுள்ள ஏற்பாடுகளை வலுவற்றதாக்குவதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் மேலும் முயற்சித்தது. ஆட்சி அதிகாரங்களைப் பகிர்வதை அரசியலமைப்பு ரீதியாக மேம்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலுள்ள பல அமைப்புகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் தவறியது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவினதும் அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினதும் செயலாற்றுகை அத்தகைய முறைப்பாட்டிற்கு இடம் வைக்கவில்லை. மாறாக, அவர்கள் அந்நடைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டினுள் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியல் தீர்வைக் காணும் விடயம், காணாமற் போன ஆட்களின் விடயம், தடுப்புக் காவலில் உள்ள ஆட்களின் விடயம், காணி விடுவிப்பு, மீள் குடியேற்றமும் புனர்வாழ்வும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தல் ஆகியன நிறைவேற்றப்படவேண்டும். புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி இவ்விடயங்களுக்கு அவசரமாக தீர்வு காணவேண்டும்.

தமிழ் மக்களின் நலன்களுக்காக மாத்திரமின்றி, முழு நாட்டினதும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவும் இவ்விடயங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டும். இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிசீலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும்.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும். ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும்.

இலங்கை இருப்பு கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும். இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்தில் கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழத் தேசியக் கூட்டமைப்பு - இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நமது நிருபர்


Add new comment

Or log in with...