Tuesday, April 16, 2024
Home » காசா போர் நிறுத்த பேச்சில் தொடர்ந்து முட்டுக்கட்டை: நெதன்யாகுவின் பிடிவாதத்தினால் ஹமாஸ் எச்சரிக்கை

காசா போர் நிறுத்த பேச்சில் தொடர்ந்து முட்டுக்கட்டை: நெதன்யாகுவின் பிடிவாதத்தினால் ஹமாஸ் எச்சரிக்கை

by damith
February 19, 2024 6:00 am 0 comment

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதோடு உடன்பாடு ஒன்றை ஏட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மைய நாட்களில் நம்பிக்கை தருவதாக இல்லை என்று மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் தெரிவித்துள்ளது.

காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் தெற்கு நகரான ரபா மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு சர்வதேச அளவில் விடுக்கப்பட்டு வரும் அழைப்புகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சனிக்கிழமை (17) நிராகரித்த நிலையிலேயே போர் நிறுத்தத்திற்கான எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளன.

காசாவில் இருக்கும் அனைத்து ஹமாஸ் படைப்பிரிவுகளையும் வேரறுப்பதாக கூறிவரும் இஸ்ரேல், அங்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக தாக்குதலை நடத்தி வருகிறது. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

டெயிர் அல் பலாஹ் நகரில் இருக்கும் அல் சவைதா மற்றும் நுஸைரத் அகதி முகாமில் உள்ள வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே பெரும் எண்ணிக்கையான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதேநேரம் தெற்கு நகரான கான் யூனிஸில் உள்ள வீடுகளை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற வான் தாக்குதல்களில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக வபா கூறியது.

இதே காலப்பகுதியில் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் ஒன்பது வீடுகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. இதனால் 13 பேர் கொல்லப்பட்டு பல டஜன் பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய கடற்படை கப்பல்களும் ரபா கடற்கரை மீது குண்டுகளை வீசி இருப்பதோடு நகரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இலக்கு வைத்து பீரங்கி தாக்குதல்களும் இடம்பெற்றதாக வபா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தவிர காயடைந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ரபா மீது இஸ்ரேல் படையெடுக்கும் அச்சம் அதிகரித்திருக்கும் சூழலில் அங்குள்ள பலஸ்தீனர்கள் எல்லை கடந்து தமது நாட்டுக்குள் ஊடுருவும் கவலை எகிப்திடம் அதிகரித்துள்ளது.

சினாய் பாலைவனத்தை நோக்கி கட்டாய வெளியேற்றத்தை எகிப்து எதிர்ப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோனுடன் தொலைபேசியில் பேசியபோதே சிசி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் இரத்தம் சிந்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுதந்திர பலஸ்தீன நாடு ஒன்றை நிறுவுவதை முன்னெடுப்பது பற்றியும் இரு தலைவர்களுக்கும் இடையே இணக்கம் எட்டப்பட்டதாக அந்த அலுவலகம் மேலும் கூறியது.

எனினும் கெய்ரோ பேச்சுவார்த்தையில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டாலும், ரபா மீதான இஸ்ரேலிய துருப்புகளின் தரைவழி தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ‘நாம் அதனை (போர் நிறுத்தம்) எட்டியபோதும் ரபாவுக்குள் நாம் நுழைவோம்’ என்று சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். எனினும் காசாவில் உள்ள பயணக்கைதிகளை அரசு கைவிட்டதாக இஸ்ரேலில் எதிர்ப்பு வலுத்து வருவதோடு கடந்த சனிக்கிழமையும் ஆயுரக்கணக்கானவர்கள் டெல் அவிவில் இஸ்ரேலிய அரசுக்கு எதிராக அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே நெதன்யாகு இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

‘எமது அன்புக்குரியவர்கள் தொடர்பில் முடிவெடுப்பதில் அரசியலை ஒதுக்கி வையுங்கள்’ என்று ஒபெர் கல்டரோன் என்ற பணயக்கைதியின் சகோதரர் குறிப்பிட்டார். ‘கெய்ரோ முயற்சி தோல்யுற்றால் அது போன்று வேறு வாய்ப்புகள் வராது என்பதுவே உண்மை’ என்றும் அவர் கூறினார்.

மியுனிக் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பேசிய கட்டார் பிரதமர் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி, பேச்சுவார்த்தைகள் அதிகம் நம்பிக்கை தருவதாக இல்லை என்றார்.

மேலும் பணயக்கைதிகளை விடுவிப்பதுடன் தொடர்புபட்ட புதிய போர் நிறுத்தம் ததொடர்பில் பல நாடுகள் வலியுறுத்தியபோதும் அந்த முயற்சி சிக்கலாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கெய்ரோவில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் மூத்த அதிகாரிகள் பங்கேற்று போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் தீவிர முயற்றியில் ஈடுபட்டுள்ளனர்.

‘கடந்த சில நாட்களாக நீடிக்கும் போக்கு உண்மையில் நம்பிக்கை தருவதாக இல்லாதபோதும், நான் எப்போழுதும் மீண்டும் மீண்டும் கூறுவது போன்று, நாம் எப்போதும் நம்பிக்கையுடனும் எப்போதும் அழுத்தத்துடனும் இருக்கிறோம்’ என்று அல்தானி கூறினார்.

மறுபுறம் பேச்சுவார்த்தைகளில் நெதன்யாகு தொடர்ந்து தந்திர ஆட்டத்தை விளையாடி வருவதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த பேச்சாளர் ஒசாமா ஹம்தான் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாட்டுக்கான பிரதான காரணம் நெதன்யாகுவும் அவரது தந்திர ஆட்டங்களும் தான் என்று கூறிய ஹம்தான் ‘அவர் எந்த ஒரு ஏற்பாடு அல்லது உடன்பாட்டையும் எட்டாமல் இருக்க முயற்சித்து வருகிறார். அது தெளிவானது’ என்றார்.

இந்நிலையில் உதவி விநியோகங்கள் வடக்கு காசாவை அடையும் வரை பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்துள்ளது. வடக்கு காசா பஞ்சம் ஒன்றை நெருங்கி வருவதாக உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘பட்டினியை பலஸ்தீன மக்களை பழி தீர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் நிலையில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது’ என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக போர் நிறுத்தம் ஒன்றுக்கான நிபந்தனைகளை ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே முன்வைத்தபோதும் அதனை ‘கேலிக்குரியது’ என்று நெதன்யாகு நிராகரித்தார். இதில் போரை முழுமையாக நிறுத்துவதுவது, இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுவது போன்ற நிபந்தனைகளும் அடங்கும்.

அதேபோன்று பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பது பற்றிய சில மேற்குலக நாடுகளின் அழுத்தத்தையும் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.

இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் உள்ள மருத்துவமனைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் சூழலில் தெற்கு காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை தொடர்ந்து இயங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனை ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் நிலையில் இங்கு அண்மைய தினங்களில் இஸ்ரேலிய துருப்புகள் சுற்றிவளைப்புகளை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT