65 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுக்கள் பகிரங்கமாக அழிப்பு | தினகரன்


65 மில். பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுக்கள் பகிரங்கமாக அழிப்பு

மின் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் துபாயிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 65 மில்லியன் பெறுமதியுடைய சிகரட்டுக்கள் அரசுடைமையாக்கப்பட்டு நேற்று அழிக்கப்பட்டன.

புகையிலை கூட்டுத்தாபன வளாகத்தில் இதனை அழிக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

26 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சிகரட்டுக்கள் மின் உபகரணங்கள் மற்றும் டீ சேர்ட் என்பவற்றால் மூடப்பட்டு இந்த சிகரட்டுக்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்க முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதன் மூலம் நாட்டிற்கு 62 மில்லியன் ரூபா வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து XIAMEN ‘Jebel Ali’ கப்பல் மூலம் அவை இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கொழும்பு முகவரியையுடைய சட்டரீதியாக பதிவு செய்யப்படாத போலி நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த சிகரெட் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறும் சுங்க அதிகாரிகள் பெருமளவு சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகத் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மாத்திரம் 30 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். (ஸ)


Add new comment

Or log in with...