மனிதமும் புனிதமும் நாணயத்தின் இரு பக்கங்கள் | தினகரன்


மனிதமும் புனிதமும் நாணயத்தின் இரு பக்கங்கள்

இலையுதிர் காலம் என்றால் மரணமல்ல. வசந்த காலத்தின் தொடக்கம். சூரியன் மறைவது மறைவல்ல. சந்திரன், விண்மீன்களின் உதயத்திற்குத் தொடக்கம்.

மலர் கருகி விடுவது முடிவல்ல. காய், கனிக்கு இடம் தருகிறது. கோதுமை மணி மடிவது இழப்பல்ல. அது மடிந்தால் தான் பயிர் முளைத்துப் பலன் தரும்.

எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறந்து கிடந்த சிறுமியைப் பார்த்து அவள் சாகவில்லை  உறங்குகிறாள் (லூக். 8:52) என்றும் தம் நண்பர் இலாசரும் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன் என்றும் (யோவா. 11:11) கூறினார்.

ஏனெனில் உலகில் நடக்கும் இயற்கையான இறப்பு எதார்த்தமானது. அது பாவத்தின் கூலி (உரோ. 6:23). ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொண்டு இறை - மனித உறவோடு வாழ்ந்து இறப்பவர்களுக்கு இந்த உலக இறப்பு இறைவனில் கிடைக்கும் ஓய்வாகிறது (யோவா. 11:25). இதை விளக்கும் வகையில் தான் ஆண்டவருக்குள் இறந்தவர்கள் செய்த நன்மைகள் அவர்களோடு கூட வரும் (திவெ. 14:13). அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்று திருவெளிப்பாடு நமக்குக் கற்றுத் தருகிறது.

நம் தாயாகிய திருச்சபை அன்புக்கு அடிமையாகி, அன்பினால் புனித நிலைக்கு உயர்த்தப்பட்ட புனிதர்களின் திருவிழாவை நவம்பரில் கொண்டாடுகிறது.

புனிதம் என்பது புண்ணிய தீர்த்தத்தில், புனித ஆற்றில் குளிப்பதால் மட்டும் வந்து விடுவதில்லை. முழுக்க முழுக்க வாழ்வைச் சார்ந்தது. மனிதம் என்ற சொல்லுக்கும் புனிதம் என்ற சொல்லுக்கும் உள்ள வேற்றுமை முதலில் உள்ள ஒரு எழுத்து மட்டும் தான்.  மனிதம் என்றாலே புனிதம் பிறக்கிறது. மனிதமும் புனிதமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழ்வதற்காக (1 யோவா. 3:3) அழைக்கப்பட்டிருக்கிறோம். 

ஏழ்மையையும் துன்பத்தையும் நோயையும் பொறுமையோடு ஏற்று வாழ்பவர்களே புனிதர்கள். பேறு பெற்றவர்கள் என்று இயேசு அழைக்கிறார்.

புனிதம் என்பது நேற்று பெய்த மழையால் இன்று முளைத்த காளான்கள் போல் அல்ல. மாறாக மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் புனிதத்தை வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மடியும் கோதுமை மணிபோல் (யோவா. 12:24) வளர்த்து எடுக்க வேண்டிய ஒன்று.

கடவுள் நம்மோடு இருக்க நமக்குத்தான் வெற்றி என்று அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அவரது செயலாளர் ஆறுதல் சொன்னபோது, "நண்பா! கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது தெரியும். ஆனால் நாம் கடவுளோடு இருக்கிறோமா?" என்பது தான் கவலை என்றார் லிங்கன்.

 நாம் இறைவனோடு இணையும்போதுதான் (யோவா. 15:5) நாம் புனிதம் அடைவோம். எண்ணற்ற புனிதர்கள் இந்த உலகில் சாட்சிய வாழ்வு வாழ்ந்து இறந்தும் வாழ்கிறார்கள் என்பதைத்தான் நாம் புனிதர்களின் திருவிழாவில் நினைவு கூருகிறோம்.

ஏனெனில் புனித பவுல் கூறுவதுபோல் சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது (1 கொ. 15:55). நாமும் இவர்களைப்போல, நான் யார் ? எதற்காக இங்கே வந்தேன்?, எங்கிருந்து வந்தேன்?, எங்கே போகிறேன்? என்பதை உணர்ந்து வாழ்வோம். அதற்காக புனிதர்களிடம் மன்றாடுவோம்.

அருட்பணி ம.அருள்


Add new comment

Or log in with...