அதிகாரம் ஆடம்பரத்தை விரும்பாத புனித சார்ளஸ் பொரோமியொ | தினகரன்


அதிகாரம் ஆடம்பரத்தை விரும்பாத புனித சார்ளஸ் பொரோமியொ

பதினாறாம் நூற்றாண்டில் திருச்சபையில் பல்வேறு கலவரங்கள் மூள்வதற்கு அதன் அதிகாரிகளின் ஆடம்பர வாழ்க்கையும் மக்களுக்கான அவர்கள் தம் சேவைகளின் குறைபாடும் என்பது பரவலான கணிப்பு.   ஆனால் அக் காலத்தில் மிக ஒழுக்கமும் மக்கள் பால் சார்பும் கொண்ட ஓர் ஆயர் வட இத்தாலியின் மிலான் நகர் ஆயராக இருந்தார் என்கிறது வரலாறு. அவர்தான் புனித சார்ளஸ் பொரோமியொ என்பவர். மிலான் நகரின் பேராயராகப் பணி புரிந்தவர்.   பிறப்பால் பிரபல பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். அக்காலத்தில் அதிகாரத்தோடு கோலோச்சிய மெடிசி குடும்பத்தின் உறவினர். எனினும் அவர் செல்வத்தையோ அதிகாரத்தையோ நாடாது தானும் ஒரு குருவாகி இறைபணி புரிய வேண்டும் என முடிவு செய்தார்.  

அவரது மாமா முறையானவரே 4ம் பத்திநாதர் பாப்பரசராவார்.  

1559ம் ஆண்டு அவர் பாப்பரசராகத் தெரிவு செய்யப்பட்ட போது சார்ளஸ் ஒரு கருதினாலாகவும் மிலான் உயர்மறைமாவட்ட நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார். எனினும் அவ்வேளையில் அவர் குருவாகக் கூட அபிஷேகிக்கப்படாத ஒரு பொது நிழலையினர் மாத்திரமே எனினும் அவர் மிக மதிநுட்பம் கொண்ட தூதுவராக விளங்கினார். இதனால் தம் 25ம் வயதிலேயே அவர் அதிமேற்றிராணியாராக உயர்த்தப்பட்டார்.  

அப்போது டிரன்ட் நகரில் திருச்சபையின் பொதுச்சங்கம் கூடியிருந்தது. அது திருச்சபைக்கு மிகவும் சிக்கலான காலகட்டம். இடையிடையே இச்சங்கத்தின் அமர்வுகள் நிறுத்தப்பட்டும் மீள ஆரம்பிக்கப்பட்டும் வந்தது. அக்காலத்தில்தான் புரட்டஸ்தாந்து பிரிவினை தலை விரித்தாடியது. எனினும் பொரோமியோவின் தனி முயற்சியால் அச் சங்கம் பத்தாண்டுகளின் பின்னர் மீண்டும் 1562ம் ஆண்டு கூட்டப்பட்டது.   இச்சங்கத்தின் காரணமாக திருச்சபை தன்னை மீண்டும் சீர்திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆயராக அவர் இருந்தாலும் அவர் அப்பதவியைப் பயன்படுத்தி எவ்வித சுக போகத்தையும் அனுமதிக்கவில்லை. மக்கள் முன் சிறந்த உதாரண புருஷராகத் திகழ்ந்தார்.  

1576ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கொள்ளை நோயின்போது தினசரி 60,000 முதல் 70,000 பேர்களுக்கு அவர் உணவளித்து காப்பாற்றினார். மற்ற அதிகாரிகள் எல்லாரும் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள நகரை விட்டு ஓடிச் சென்றுவிட்டனர். ஆனால் சாரளஸோ மக்களோடு இருந்து அவர்களுக்கு சேவையாற்றினார். அவர்களை மரணப்படுக்கையிலிருந்து காப்பாற்றினார். இத்தகைய கடின உழைப்பும் தன்னைப் பற்றி சிந்தியாமல் மக்களைப் பற்றியே சிந்தித்து வாழ்ந்தமையும் அவர் மிக இளமையான 46 வயதிலேயே காலமாகக் காரணமானது.  

சகோ. டிவோட்டர்


Add new comment

Or log in with...