தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கு | தினகரன்


தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கு

தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கு-ITAK Decides to Support NDF Candidate Sajith Premadasa at the Presidential Election

மத்திய செயற்குழு தீர்மானம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (03) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடக சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரும் உடன் இருந்தனர். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

"இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் காலை 10.30 முதல் 4.30 வரை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய பராளுமன்றக் குழு, தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் இது பற்றி ஆராயப்பட்டப்பட்டது. இன்று எமது கட்சியினுடைய உத்தியோக பூர்வ முடிவாக அன்ன சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாச அவர்களை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது."

"இந்த தீர்மானம் தமிரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு எடுத்திருந்தாலும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற விடயங்களை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் கைகளில் அவற்றை ஒப்படைத்து இருக்கின்றோம். இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த மற்றைய இரண்டு கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடி இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்."

"நாங்கள் பிரதான இரு வேட்பாளர்கள் தொடர்பான பல விடயங்களை ஆராய்ந்து இருக்கின்றோம். அதனை குறிப்பிட்டு எதனையும் கூற முடியாது. அவர்களுடைய கடந்தகால செயற்பாடுகள், ஜனநாயகத்திற்கு அவர்கள் காட்டும் பங்களிப்பு, எங்களுடைய எதிர்பார்ப்புக்கள், அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இப்படியாக பல விடயங்களை ஆராய்ந்தோம். இன்றைய நிலையில் எங்களுடைய மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கை திரு சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்று ஏகமனதாக முடிவு எட்டப்பட்டது."

"எங்களுடைய கருத்தையும் கேட்டு தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். மக்கள் சுயமாக வாக்களிப்பவர்கள். மக்கள் திறமைசாலிகள். மக்களுக்கு அரசியல் தெரியும். விசேடமாக தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள். அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. மக்களுடைய கருத்தையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். மக்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்பியவருக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதல்ல. நிதானித்து இருக்கின்ற அரசியல் நிலையில் தமிழ் மக்கள் சார்பாக அரசாங்கத்தோடும் நாட்டில் இருக்கும் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடத்துவது நாங்கள். நாங்கள் மக்களுடைய பிரதிநிதிகள். மக்கள் எங்களை தங்களது பிரதிநிதிகளாக நியமித்துள்ளார்கள். அந்த கடப்பாட்டை சரியாக செய்ய வேண்டுமாக இருந்தால் மக்களை சரியாக வழிகாட்ட வேண்டும்."

"இந்த தீர்மானம் சம்மந்தமான விளக்கமான காரணங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பங்களகாளிக் கட்சி தலைவர்களுடன் பேசிய பின்னர் விபரமாக அறிக்கை வெளியிடுவார்." எனத் தெரிவித்தார்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)


Add new comment

Or log in with...