ஒளிக் கடத்தல் | தினகரன்


ஒளிக் கடத்தல்

எல்லாக் கரைகளிலும் ஒற்றையாய் நின்று அவர்கள் பிராத்திக்கக் கூடும். ஒளியினை சுமக்கின்ற அபரிதமான வாழ்வினை அவர்கள் விரும்பியிருக்கக் கூடும். பிரகாசத்தின் விரிந்த திசைகளில் ஒட்டு மொத்தமாய் பதிந்திருந்தது அவ்வொளி. பொற்காசுகள் சிதறுகின்ற கதிர்வீச்சில் அவர்கள் அதை கண்டிருக்கக் கூடும். வழிப்போக்கனின் திசையற்ற பயணங்களிலிருந்து ஒரு நிலவினை பிடித்தெடுப்போம்.

புத்தன் கடந்து செல்லும் பாதைகளின் இடுக்குகளினை சுக்கு நூறாக உடைத்து பரப்பி விடுவோம். பின்னர் அவர் சுமந்திருக்கின்ற ஒளியின் தெறிப்பிலிருந்து நிலவு மங்கிப் போவதினை அவர்கள் அவதானித்திருக்கக் கூடும். தன்னைத் தூய்மைப்படுத்தும் குளிர்ந்த பானங்களிலிருந்து ரசத்தினைக் கரைத்தான் புத்தன்.

வழியெங்கிலும் ஊத்தப்பட்ட ரசங்களின் ஈரம், ஒளியில் பொங்கி வடிந்திருக்கலாம். உடலினை பிணைத்துக் கொள்கின்ற ஒரு ராத்திரியின் ஓசைகளில் ஒளிக்கடத்தலினை பெற முயற்சிக்கிறான். அவர்களிடமிருந்து அபகரித்துக் கொள்வதற்கான பார்வை ஒளியின் வியூகத்தில் பரவிக்கிடந்தன. சூடேற்றப்பட்ட மணலின் வெக்கையிலிருந்து ஒளி வேறுபட்டிருந்தது.

ஒளிரும் கதைகள் பற்றி ஏலவே அவர்கள் கேட்டிருக்க முடியும். முன்னரான நிரூபங்களிலிருந்து அப்படியான கதைகளை அவர்கள் கேட்டிருப்பது சுமையன்றி, ஒரு சுமத்தலாக அவை மாற்றியமைத்திருக்கக் கூடும். எல்லோராலும் பற்றிக் கொள்ள முடியாத நித்திய ஒளியிலிருந்து மீண்டுமொரு முறை பிறப்பெடுக்க தொடங்கியிருந்தான் புத்த பெருமான்.  

யஷோதரை கட்டிய கோட்டையிலிருந்து ஒரு இரவு தயாராகியிருந்தது. புத்தனை அரவணைத்து ஒளியினைக் கைப்பற்ற முனைந்தாள். இரவுகள் நீடிக்கும் கதைகளை அவள் அறிந்திருக்க முடியும். ஒளியினைக் கைப்பற்ற அவளிடம் ஏதுவாய் ஒன்றும் அகப்படவில்லை. இருள் படிந்திருக்கும் உலக விரிப்பின் மீது அவளின் ஏக்கம் பரப்பப்பட்டிருந்தது.

விடியலின் நிபந்தனைகளை எதிர்த்தபடி அவளின் கனவுகள் நீண்டிருந்தன. எத்தனை யுகங்களாய் பற்றிக் கொள்ள முனையும் ஒளியின் ஊடாட்டம்தான் புத்தன் என்பது யாருக்குத் தெரியும்?, ஒளியினை சுமக்கும் நிபந்தனையிலிருந்து யஷோதரை மாறியிருந்தாள். ஒரு முறை அவரை இழுத்து படுக்கையில் கிடத்தி ஒளியினைச் சுமக்கின்ற பெரும் பேற்றை அவளால் உருவாக்க முடிந்தது. உருவாக்கும் செயலிலிருந்து மாற்றம் கொள்கின்ற ஒளியினையே அவரிடம் கண்டிருந்தாள். தீர்ந்துபோகக் கூடிய உருவாக்க நிலையிலிருந்து அப்படியானதொரு ஒளி தோன்றியிருக்க முடியாது.

உலகின் அனைத்துப் பரப்புகளிலும் தன்னை அடையாளப்படுத்தும் ஒளியின் ஆத்மார்த்தம் பற்றி யாரால் குறிப்பிட முடியும்? ஒளிக்கு நிகரான ஒளி இங்கில்லை என்பதே வாழ்வின் எட்ட முடியாத ரகசிய பரம்பல் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். இன்னுமொரு மாசற்ற ஜீவன் அவ்வொளியினைச் சுமந்து கொண்டிருந்தது.

நடுநிசி இரவில் கைவிடப்படும் ஒரு பேதையாக அவளை உணரத் தவறியிருந்தாள். அவளுக்கென்று ஒரு குழந்தை உருவாக்கப்படுவதும், அதன் வழியே அவளின் தனிமை நிர்ணயிக்கப்படுவதும் காலத்தின் விதியாகவே இருந்தது. பின்னர் ஒரு நாளில் ஒளியிளை தரிசிக்கின்ற போது, அவள் நிறைவான பல கேள்விகளை கேட்கக் கூடும். எப்படியான பதில்களையும் எதிர்பார்க்காதபடி அவ்வொளி நிற்கும் பொழுதுகளில். ராகுலன் சந்ததியிலிருந்து ரோஹிங்கிய உயிர்கள் உருவானதை புத்தன் எப்பொழுது அறிவானோ?   


Add new comment

Or log in with...