டெங்கு | தினகரன்


டெங்கு

தவிர்க்கும் வழிமுறைகள்

தற்போதைய மழைக் காலநிலையுடன் சேர்த்து டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்நோய்க்கு உள்ளானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடியவர்களாகவும் உள்ளனர்.  

இக்காய்ச்சலானது, டெங்கு வைரஸ்களால் தான் உருவாகிறது. இவ்வைரஸ் நான்கு வகைகளை கொண்டது. அவை மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை தோற்றுவிக்கும். இவைரஸை ஈடிஸ் வகை நுளம்புகள் தான் காவிப்பரப்பும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டைய் வகை நுளம்புகள் தான் இதில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.  

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 80வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்படாமல் சாதாரண காய்ச்சலாகக் காணப்படும். இந்நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படுவதற்கு சாதாரணமாக 3முதல் 14நாட்கள் எடுக்கும். குறிப்பாக 4முதல் 7நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளுக்கு சாதாரணமாக வெளிப்படும் தடிமல், வாந்தி பேதியுடன் இந்நோய்க்கான அறிகுறிகள் தொடங்கும். வளர்ந்தவர்களுடைய அறிகுறியை விட குறைவான அறிகுறிகளே குழந்தைகளுக்கு வெளிப்படும். ஆனால் இந்நோய்க்கு உரிய நேர காலத்தில் சிகிச்சை அளிக்கத் தவறும் பட்சத்தில் தீவிர நோய் நிலைக்கு முகம் கொடுக்க நேரிடும்.  

இந்நோய்க்கு உள்ளாகும் 20வீதத்தினருக்கு தீவிர காய்ச்சல், கண்ணின் பின்பக்கமாக வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாதல் என்றபடி அறிகுறிகள் வெளிப்படும். ஆனபோதிலும் நோய் உடலில் காணப்படும் நேர காலம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் அபாயகரமானதாகவும், மீழும் கட்டம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் தீவிரக் காய்ச்சலோடு ஆரம்பிக்கும் இந்நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2முதல் 7நாட்களுக்கு கொண்டதாக இருக்கும். இக்காலப்பகுதியில் 50முதல் 80வீத நோயாளிகளுக்கு பின் தோலில் தடிப்புகள் வெளிப்படும். சிலருக்கு இலேசான குருதிப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.   

நோய் தீவிரக் கட்டத்திற்கு செல்லும் போது குருதி நாளங்களும், சிறு நரம்புகளின் சுவர்களும் பலவீனமடைந்து இவற்றிலிருந்து திரவங்கள் நெஞ்சு கூட்டிற்கும், வயிற்றிற்குள்ளும் வந்து சேரும். இதனால் குருதியில் நீரின் அளவு குறையும், முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் குருதியோட்டத்தின் அளவும் குறைவடையும். அதன் விளைவாக இக்கட்டத்தில் உறுப்புகள் செயலிழப்பதும், அதிக குருதிபோக்கும் குறிப்பாக குடல் பகுதியில் ஏற்படலாம்.

நோயிலிருந்து மீழும் கட்டத்தில் குருதி நாளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரானது மீண்டும் நாளங்களுக்குள் உள்ளிழுக்கப்படும். இவை 2, 3நாட்களுக்கு இடம்பெறலாம்.  

இச்சமயம் சில சமயம் குருதி நாளங்களில் நீர் அதிகரிக்க முடியும். இதன் விளைவாக மூளையில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சுயநினைவு இழப்புக்கான வாய்ப்பு அதிகமாகும். அத்தோடு இதய தொற்றும் ஈரல் பாதிப்புகளும் ஏற்படலாம். இந்நோய் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சல். இது அதிக குருதிப்போக்கை ஏற்படுத்துவதோடு செங்குருதி சிறுதுணிக்ைககளையும், சிறுதட்டுக்களையும் குருதித் திரவங்களையும் குறைவுபடச் செய்யும். இரண்டாம் வகை டெங்கு அதிர்ச்சியாகும். இது இந்நோய்க்கான அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.  

இவ்வாறு பேராபத்தை ஏற்படுத்தும் டெங்கு வைரஸ்களை காவிப்பரப்பும் நுளம்புகள் மனிதர்களைக் குத்தும் போது அதன் எச்சில் ஊடாகவே வைரஸ் மனித தோல்களுக்குள் செல்லும்  இவ்வைரஸ் பின்னர் உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வெண்குருதி சிறுதுணிக்கைகளுக்குள் பிரவேசித்து தன் இனத்தை பெருக்கியபடி உடலினுள் உலாவரும். இச்சமயம் வெண்குருதி சிறுதுணிக்கைகள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.  

இக்கலங்கள் வைரஸ்களை அழிக்கும் “இன்டர்பெரான்” எனும் பொருள்களை உடலில் உருவாக்க சமிக்ஞைகளை வெளியிடும். இதன் மூலம் உடலில் அதிகபடியான இன்டர்பெரான் எனும் புரத பொருள்கள் உருவாகும். இதனால், உடல் வெப்பம் மிக விரைவாக அதிகரிக்கும், உடல் வலியையும் உருவாக்கும். அதே சமயம் வைரஸ்களும் முடிந்தவரை தன் இனத்தைப் பெருக்க முயற்சிக்கும். இதன் விளைவாக என்பு மச்சையும், ஈரலும் பாதிப்படையும். இதனால் குருதியை உறையவைக்கும் சிறுதட்டுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். விளைவாக குருதி நாளங்களின் துவாரங்கள் வழியாக திரவங்கள் வெளியேறி மேலே குறிப்பிட்ட பாதிப்புக்கள் ஏற்படும்.  

குறிப்பாக பகல் நேரங்களில் குத்தும் தன்மையையும் கொண்டிருக்கும் இந்நுளம்புகள் இவ்வைரஸைப் பரப்பவே செய்யும். பெண் இன நுளம்புகள் இந்நோய்க்கு உள்ளானவர்களைக் குத்தி குருதியை உறிஞ்சும்போது வைரஸ் உடலுக்குள் செல்லும். பின்னர் நுளம்பின் குடல் சுவரில் 8முதல் 10நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். அதன் பின் நுளம்பின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும் இவ்வைரஸ் நுளம்பின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை குத்தும் போது மனிதனின் உடலுக்குள் செல்லும். இவ்வைரஸ் நுளம்புக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது. ஆனால் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மிக அருகிலுள்ள தெளிந்த நீர் தேங்கும் இடங்களில் தான் இந்நுளம்புகள் முட்டையிட்டு பல்கிப்பெரும்.  

இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெண்குருதி சிறுதுணிக்கைகளினதும், குருதி சிறுதட்டுக்களினதும் எண்ணிக்கையை வைத்து டெங்கு காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை.

ஏனெனில், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவடைலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய, உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ் புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.   இந்நோய்க்கென சிகிச்சை முறைகள் இல்லாததால் நோய் வரும் முன் தடுப்பதே எளிய வழியாகும்.

இந்நோயைப் பரப்பும் நுளம்புகள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் கவனம் செலுத்த வேண்டும். இந்நுளம்புகள் பகல் வேளைகளில் குத்துவதால் அந்நேரங்களில் அவை குத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதன் நிமித்தம் கை, கால்களை மறைக்கும் உடைகளை அணிய வேண்டும். நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்வதோடு போதிய ஓய்வும் எடுக்க வேண்டும் அதுவே இந்நோய்க்கான சிறந்த தீர்வாகும்.

முஹம்மத் மர்லின் 


Add new comment

Or log in with...