பார்வைக்கு முதலிடம் | தினகரன்


பார்வைக்கு முதலிடம்

குழந்தை பிறந்தவுடன் ஒரு முறை கண் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது என்பது மருத்துவர்களின் கருத்தாகும். ஏனெனில் பிறவிக் கோளாறுகள் (Congenital defects) இருக்கின்றனவா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். அவ்வாறு இருக்குமாயின் ஆரம்ப கட்டத்திலேயே அவற்றைச் சீர்செய்து கொள்ள வாய்ப்பாகவும் இருக்கும்.  

அதேநேரம் பிள்ளைகள் வீட்டிலோ வீட்டுக்கு வெளியிலோ விளையாடும்போது கண்ணில் காயம் ஏற்படாமல் கவனமாக விளையாடும்படி அவர்களைப் பழக்க வேண்டும். இதன் மூலம் குறிப்பாகக் கருவிழிப் பார்வை இழப்பால் ஏற்படும் நிரந்தரப் பார்வை இழப்பைத் தவிர்த்துக் கொள்ளலாம்.  

அத்தோடு குழந்தையைக் கல்வி கற்க சேர்க்க முன்னரும் ஒரு முறை கண்ணைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அதன் மூலம் மாறுகண் பிரச்சினையோ அல்லது பார்வைப் பிரச்சினையோ இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஒருவேளை மாறுகண் இருப்பின் மூக்கு கண்ணாடி, கண் பயிற்சி அல்லது கண் அறுவை சிகிச்சை மூலம் அதனை சீர்செய்து கொள்ள முடியும். இவ்வாறான விடயங்களை குழந்தையின் எட்டு வயதுக்குள் சீர்செய்து கொள்வதே நல்லது. அதுவே குழந்தையின் பார்வை மற்றும் கண்ணின் ஆரோக்கியத்திற்கு உகந்தது. மாறுகண் அதிர்ஷ்டம் எனக்கருதி குழந்தைக்கு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொடுப்பதைத் தவிர்க்கக்கூடாது.

அது சில சமயம் பார்வை இழப்புக்கும் கூட வழிவகுத்துவிடலாம்.  

மேலும் பார்வைக் குறைபாட்டுக்குக் கண்ணாடியைப் பாவிப்பவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை கண்ணாடி பவரில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதனைச் சீர்செய்து கொள்ளும் வகையில் புதிய கண்ணாடியைப் பிரேமில் போட்டுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

குறிப்பாக, வளரும் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்குக் கண்ணாடி பிரேமை ஒவ்வொரு முறையும் கட்டாயம் மாற்ற வேண்டும். ஏனெனில் ஓராண்டுக்குமுன் போட்ட பழைய பிரேம், வளரும் நிலையில் உள்ள பிள்ளையின் முகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமையும்.

அதாவது வளரும் பிள்ளையின் முகம் சற்றுப் பெரிதாகி முகத்துக்கு அளவு பொருந்தாமல் நெற்றியின் இரு பக்கத்தையும் பிரேம் அழுத்தி பக்கவாட்டில் நீண்ட அழுத்தமான பள்ளத்தை ஏற்படுத்தி விடலாம். அது வலியைக்கூட தோற்றுவிக்கலாம். அத்தோடு பிரேம் சிறிதான நிலையில் இருக்கும் போது பார்வையும் தெளிவில்லாமல் இருக்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு செயற்படுவது அவசியம்.  

இவை இவ்வாறிருக்க, நாற்பது வயதாகும் போது வெள்ளெழுத்துப் பிரச்சினையும் ஏற்படும். நாற்பதை நெருங்கும்போது தலையில் முடி எவ்வாறு நரைக்கின்றதோ அதே போன்று வயதாவதால் உடலில் ஏற்படும் மாற்றத்தில் இதுவும் ஒன்றாகும். வெள்ளெழுத்துக்குக் கண் ஆய்வு செய்து தகுந்த கண்ணாடியைப் பாவிக்க வேண்டும். இதற்குரிய கண்ணாடியைப் பாவிக்கும் போது வயதான தோற்றம் ஏற்படலாம் அல்லது கண்ணாடியைப் பாவிக்கத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் கண்ணாடியைப் பாவிக்க வேண்டிவரும் என எண்ணி பலர் கண்ணாடியைப் பாவிக்க வேண்டும் எனத் தயக்கம் காட்டுகின்றனர்.

ஆனால் இவ்வகைத் தயக்கத்தின் விளைவாகக் கண்ணாடியைப் பாவிக்காது விடின் பலவித இழப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.  குறிப்பாகப் படிவங்களை உரிய ஒழுங்கில் நிரப்பவும், பற்றுச்சீட்டுக்களின் கட்டணங்களை உரிய முறையில் அறிந்து கொள்ளவும் முடியாத நிலைமை ஏற்பட்டுவிடலாம். இவ்வாறான இழப்புகக்ளையும் பாதிப்புக்களையும் தவிர்க்க மருத்துவ ஆலோசனையுடன் செயற்படுவதே உகந்ததாகும்.  

மேலும் 35வயதாகும் போது நீரிழிவு, குருதி அழுத்த உயர்வு என்பன தொடர்பில் ஒவ்வொருவரும் பரீட்சித்துக் கொள்வதே சிறந்ததாகும்.

ஏனெனில் ஒருவேளை நீரிழிவுக்கு உள்ளாகி இருப்பது தெரிய வந்தால் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நீரிழிவால் கண்ணில் குருதிக்கசிவு ஏற்பட்டு பார்வை கடுமையாக – சீர்செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படலாம்.

(நீரிழிவு விழித்திரைப் பாதிப்பு). அதனால் நீரிழிவுக்கு உள்ளாகி உள்ளவர்கள் குருதியில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு கண்களையும் பரிசோதித்து கொள்ளவும் வேண்டும்.

குருதி அழுத்த உயர்வையும் கட்டுப்படுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியமான விடயமாகும்.  

மேலும் 40வயதாகும் போது கண்ணில் கண் அழுத்தம் (Eye Pressure) இயல்பாக இருக்கிறதா என்பதையும் கட்டாயம் ஒவ்வொருவரும் பரிசோதித்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வழுத்தம் சத்தமில்லாமல், எந்தவித அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் ஏற்படக்கூடியதாகும். இந்த அழுத்தம் குறித்து கவனம் செலுத்தாது விடின் கண் அழுத்தம் அதிகரித்து பார்வையே நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டும். கண் பார்வை பாதிக்கப்படும் வரையும் அதற்கான அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படாது. இவ்வாறு ஏற்படும் பார்வைப் பாதிப்பை மீண்டும் சீர்செய்யவும் முடியாது.  

ஆனால் கண் அழுத்தத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து கண்சொட்டு மருந்து, லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் உரிய சிகிச்சையை அளித்தால் பாதிப்பு தொடர்ந்தும் ஏற்படாமல் பார்வையைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வகைப் பாதிப்புக்கு தொடர் சிகிச்சை அவசியமானது.

அதனால் ஆண்டுக்கு ஒரு முறை கண் அழுத்தம் தொடர்பில் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கண்களில் இவ்வகைப் பாதிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.  

 ஏனெனில் கண்ணில் ஏற்படும் சிவப்புநிற மாறுதல் சில சமயம் கண் அழுத்த உயர்வு போன்ற வேறு சில நோய்களின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அதனால் கண் தொடர்பான நோயியல் நிபுணரின் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மருத்துவரின் ஆலோசனை பெறாது கண்களுக்கு மருந்துகளைப் பாவிக்ககூடாது. சில சமயம் பாவிக்கும் மருந்து கண்களுக்கு ஒவ்வாதவையாக இருக்கும் .

அதன் விளைவாக பார்வையே பாதிக்கப்பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது.அதனால் கண்கள் தொடர்பான உபாதைகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும். 

முஹம்மத் மர்லின்


Add new comment

Or log in with...