'பிரதிகளின் உயிர்ப்பு' | தினகரன்


'பிரதிகளின் உயிர்ப்பு'

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தமிழ் இலக்கிய விழாவின் முதல்நாள் நிகழ்வில் “பிரதிகளின் உயிர்ப்பு” பேசாப் படைப்பை பேசுதல்(நூலுருப் பெறாதவை)   ஆய்வரங்கம் பேராசிரியர் செ.யோகராசாவின் தலைமையில் சிறப்பாக சற்று வித்தியாசமான நிகழ்வாக  நடைபெற்றது. மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உள்ளுர் படைப்பாளிகள், கல்வியற் கல்லூரி மற்றும் பாடசாலை மாணவர்கள் என மண்டபம் நிறைந்த இரசிகர்கள்.  

ஆய்வுகளில் பவளசுந்தரம்மாவின் புனைவுவெளி ஆய்வை கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலன்ரினா பிரான்சிஸூம் அபூபக்கரின் கவிமொழி ஆய்வை தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவும் சாருமதியும் படைப்பும் செயற்பாடும் ஆய்வை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் வெ.தவராசாவும் பாண்டியூரானின் படைப்புவெளி ஆய்வை ஆசிரியர் த.மேகராசாவும்  வ.அ.இராசரெத்தினத்தின் பேசப்படா படைப்புலகம் ஆய்வை மென்பொருளாளர் மு.மயூரனும் மேற் கொண்டனர். இவர்கள் அனைவருமே தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்துக்குள் ஆய்வுகளை இரத்தினச் சுருக்கமாக செய்து முடித்திருந்தாலும் சிறப்பம்சமாகும்.

ஆய்வுகள் ஆழiமானவையாகவே இருந்தன என்பது சிறப்பம்சமாகும். சம்பந்தப்பட்ட படைப்புகளுக்கு வெளியே அதிக கவனம் செலுத்தியதை ஆய்வாளர்கள் தவிர்த்திருந்தால் ஆய்வுகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.  

ஆய்வுரை சம்பந்தமாக தெளிவு பெறுவதற்கான நேரம் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள் என பலரும் ஆய்வரங்கைப் பாராட்டியதுடன்  தவிர்த்துவிடப்பட்டிருந்த படைப்பாளிகளின் பெயர்களையும் சுட்டிக்காட்டினர். அவர்களும் எதிர்காலத்தில் இத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.  ஆய்வுகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு ஆய்வாளர்கள் விளக்கமளித்தனர்.

பேராசிரியர் யோகராசா ஆய்வரங்கின் இறுதியில்  நிறைவுறையாற்றுகையில்:

மனித நேயம் உள்ள எழுத்தாளர்கள் அனைவருமே முற்போக்கு எழுத்தாளர்கள்தான். கடவுளுக்கு சவால் விட்ட  வள்ளுவரும் முற்போக்கு எழுத்தாளர்தான். முற்போக்குச் சிந்தனையில் எழுதுபவர்கள் இடதுசாரிகளாக  இருக்க வேண்டும் என்ற நியதியில்லை. பாண்டியூரானுக்கும் இடதுசாரி இயக்கங்களுக்கும் தொடர்பில்லை என்பதே உண்மை. இலங்கையில் வரலாற்று நூல்கள் மர்ம நாவல்களாகவே வெளிவந்துள்ளன. இலங்கையிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி வரலாற்று நூல்கள் வெளிவருவது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.இதற்குக் காரணம் முந்திய வரலாற்று நூல்களை படித்த பின்னரே வரலாற்று நூல்களை எழுத முடியும்.

வரலாற்று நூல்கள் பற்றிய தேடல் அவசியம். ஒரு இரவில் நாவலை எழுதும் எழுத்தாளர்களுக்கு வரலாற்று நூல் எழுதுவதற்கான அவகாசம் இருப்பதில்லை.

சாண்டில்யனின் நாவல்களில் ஒரு வீதம் கூட வரலாறு கிடையாது. வரலாற்று நாவல்களும் நம்மவர்களால் எழுதப்பட வேண்டும்.நாம் பேசாப் படைப்பாளிகள் பெயர் பட்டியல் ஒன்றை வெளியிட உள்ளோம்.பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அத்தகைய படைப்பாளிகளின் ஆக்கங்களை நூலுருப்பெறச் செய்யவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.             

வி.கே.ரவீந்திரன்       
(படங்கள்: கல்லாறு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...