3rd T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி | தினகரன்


3rd T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

3rd T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி-3rd T20 SLvAUS-AUS Won by 7 Wickets

தொடர் 3-0 என வைட்வொஷ்

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியையும் அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டு தொடரை 3-0 என வெற்றி கொண்டுள்ளது.

இலங்கை  அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி20 கிரிக்கெட் போட்டி, இன்று (01) மெல்பேர்ன் மைதானத்தில் இடம்பெற்றது.

முதல் இரு போட்டிகளிலும் நாணயச்சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணயச்சுழற்சியில் வெற்றி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் விக்கெட் காப்பாளர் குசல் ஜனித் பெரேரா 57 ஓட்டங்களையும், அவிஷ்க பெனாண்டோ 20 ஓட்டங்களையும், பானுக ராஜபக்‌ஷ ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பெட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மிச்சேல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 143 ஓட்ட வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 17.4 ஓவர்களில் 14 பந்துகளை மீதமிருக்க 145 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

3rd T20: SLvAUS; அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி-3rd T20 SLvAUS-AUS Won by 7 Wickets

முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய டேவிட் வோனர், இப்போட்டியிலும் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்றார். டேவிட் வோனர் முதல் போட்டியில் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும், இரண்டாம் போட்டியில் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் 37 ஓட்டங்களையும், அஷ்டன் டேர்னர் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க மற்றும் நுவன் பிரதீப், லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

மிக சிறப்பாக ஆடிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் 3 போட்டிகளைக் கொண்ட இத் தொடரில் ஏற்கனவே அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளனர்.

12 மாத தடையின் பின்னர் சர்வதேச ரி20 போட்டியில் களமிறங்கி, தொடர் முழுவதும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய டேவிட் வோர்னர் ஆட்ட நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

இலங்கை 142/6 (20.0)
குசல் ஜனித் பெரேரா 57 (45)
அவிஷ்க பெனாண்டோ 20 (22)
பானுக ராஜபக்‌ஷ 17* (11)

பெட் கம்மின்ஸ் 2/23 (4.0)
கேன் ரிச்சர்ட்சன் 2/25 (4.0)
மிச்சேல் ஸ்டார்க் 2/32 (4.0)

அவுஸ்திரேலியா 145/3 (17.4)
டேவிட் வோனர் 57 (50)*
ஆரோன் பிஞ்ச் 37 (25)
அஷ்டன் டேர்னர் 22* (15)

நுவன் பிரதீப் 1/20 (3.4)
லசித் மாலிங்க 1/22 (4.0)
லஹிரு குமார 1/49 (4.0)

ஆட்ட நாயகன்: டேவிட் வோனர்
தொடரின் நாயகன்:  டேவிட் வோனர்


Add new comment

Or log in with...