முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. சேனாரத்ன ஆகியோரின் முழு பி அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்ப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து வாக்குமூலத்தை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக பொலிஸார் உரிய முறையில் செயற்படாமை குறித்து சட்டமா அதிபரினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச வழக்கறிஞர் நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில், ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்த, பொலிஸ் சார்ஜென்ட் ஜயமினி புஸ்பகுமார என்பவர் உயிரிழந்தார்.
இதன்போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.
குறித்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில், ஜே. ஶ்ரீரங்கா, ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி அவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
Add new comment