Home » அக்குறணை வெள்ளப்பெருக்கு ஜனாதிபதி செயலகம் அக்கறை

அக்குறணை வெள்ளப்பெருக்கு ஜனாதிபதி செயலகம் அக்கறை

by Gayan Abeykoon
February 15, 2024 8:57 am 0 comment

கண்டி மாவட்டத்தில் அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதை தவிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களையும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம், நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது .

அது சம்பந்தமாக ஜனாதிபதியின் செயலாளர் சார்பில் மேலதிக செயலாளர் ஜீ.எல்.வெர்மன் பெரேரா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு இம்மாதம் 7ஆம் திகதி எழுதியுள்ள  கடிதத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதிக்கு எழுதிய முழுமையான கடிதத்தைப் பார்வையிடுவதற்கு அதன் QR Code ஐயும் இணைத்து அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் தெரிவித்துள்ளவை, இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை கரிசனைக்கு உரியன என்றும் ஜனாதிபதியின் மேலதிக  செயலாளரின் இந்தக் கடிதத்தில் இரண்டாவது அம்சமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதன் மூன்றாவது அம்சமாக, தற்பொழுது தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் முழுமையான ஆய்வு அறிக்கையில்(Comprehensive Study Report)  இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தையும் (SLLRDC) உள்வாங்கியதாக  இதனை அந்த நிறுவனத்தோடும் பகிர்ந்து கொள்ளுமாறும்  பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்படி டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி கடிதத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் ஆய்வறிக்கை தற்போது எத்தகைய முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது என்பதையும் அறிக்கையிடுமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

அக்குறணை நகரில் காணப்படும் சட்ட விரோத கட்டடங்கள் காரணமாகவும், அதிக மழை வீழ்ச்சி உள்ள காலங்களில் அக்குறணையை நகரை ஊடறுத்துச் செல்லும் பிங்கா ஓயா பெருக்கெடுத்தது ஓடுவது தடைபடுவது போன்ற பல்வேறு காரணங்களாலும் வெள்ள நீர் தேங்கி, நகரமும் சூழவுள்ள பிரதேசங்களும் பெரிதும் பாதிக்கப்படுவதையிட்டு பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளின் படி, கடந்த டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி  கண்டி, ஜனாதிபதி மாளிகையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் ஆகியோர்,   சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான முக்கியமான கூட்டம் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்  இடம்பெற்றது தெரிந்ததே. அதன் போது, இந்த இதனை கண்காணிக்கும் பொறுப்பை   மத்திய மாகாண ஆளுநர்  லலித் யூ கமகேயிடம் ஜனாதிபதி ஒப்டைத்திருந்தார்.

மு.கா.  தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமும் ஆளுநர் லலித் யூ கமகேவுக்கும் இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு விரிவான கடிதத்தை ஏற்கனவே கையளித்திருந்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT