மட்டு. முன்னாள் எம்.பி. ஈழத்தின் பெண் எழுத்தாளர் தங்கேஸ்வரி காலமானார் | தினகரன்


மட்டு. முன்னாள் எம்.பி. ஈழத்தின் பெண் எழுத்தாளர் தங்கேஸ்வரி காலமானார்

மட்டு. முன்னாள் எம்.பி. ஈழத்தின் பெண் எழுத்தாளர் தங்கேஸ்வரி காலமானார்-Ex Parliamentarian Thangeswary Passed Away

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும், இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளருமான செல்வி க. தங்கேஸ்வரி நேற்று (26) சனிக்கிழமை மாலை காலமானார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கதிர்காமன் தங்கேஸ்வரி தனது 67ஆவது வயதில் உயிரிழந்தார்.

கடந்த சில வருடங்களாக இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்று வந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர் இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகியிருந்த அவர், எழுத்துப்பணி, பொதுப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தொன்மைகளையும் ஆராய்ந்து பல நூல்களையும் எழுதியுள்ள அவர், நோய்வாய்ப்பட்டிருந்த வேளையிலும் கூட தனது ஆய்வுப்பணியை கொண்டு தொடர்ந்தும் எழுதிவந்தார்.

அன்னாரது சடலம் வவுணதீவு, கன்னன்குடாவில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...