தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் | தினகரன்


தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்-Prime Minister Ranil Deepawali Greeting

ஐக்கியம், சமாதானம், ஒற்றுமை ஏற்பட திடசங்கற்பம் பூணுவோம்
பிரதமர் வாழ்த்து

ஐக்கியத்துடனும், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை இன்றைய தீபாவளி தினத்தில் நினைவுகூருவதுடன், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது தீபாவளி தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், தீமையிலிருந்து நன்மைக்கும் மீண்டு, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று அனைத்து அம்சங்களிலும் தனிப்பட்ட ரீதியிலும், பொது சமூக ரீதியிலும் ஆன்மீக விடுதலைக்கான போராட்டத்தை வெற்றிகொள்வதை அடையாளப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் இந்துக்கள் தீபங்களை ஏற்றி, சமய அனுட்டானங்களில் ஈடுபட்டு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களுக்கு கேடுவிளைவித்த நரகாசுரனைத் அழித்த தினம் மற்றும் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை என்பன விசேடமாக தீபாவளி தினத்தில் நினைவு கூரப்படுகிறன.

இந்த அனைத்து புராண இதிஹாசக் கதைகள், சம்பிரதாயங்கள், சமய அனுட்டானங்கள் ஊடாகவும் மனிதனிடமும் சமூகத்திலும் காணப்படும் தீமை எனும் இருளை விரட்டியடித்து நன்மை எனும் ஔியை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.

தீபாவளி அனுட்டானங்கள் ஊடாக தன்னிடமுள்ள அகங்காரம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நீக்கி நலன்மிகுந்த அம்சங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்பது இந்துமதத்தின் நம்பிக்கையாகும்.

மானிடம் மேலோங்கி, சமாதானம் நிலைபெற்று மனிதன் தனது தனிப்பட்ட அபிலாசைகள் தொடர்பாக மாத்திரம் கவனம் செலுத்தாது, ஏனையோரின் நலன்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும் எனத் தீபாவளி எடுத்தியம்புகிறது.

பிளவுபட்டுப் பிரிந்து செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும், தமது உள்ளங்களிலுள்ள ஞானத்தின் ஒளி அகன்று விடாது பேணிச் சென்று ஐக்கியத்துடனும், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதுடன், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர இந்துமக்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும்தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...