Thursday, April 18, 2024
Home » கம்பளை அல் மத்ரஸதுல் ஹக்கீமியாவில் முப்பெரும் விழா நிகழ்வும் கௌரவிப்பும்
25 ஆவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும்

கம்பளை அல் மத்ரஸதுல் ஹக்கீமியாவில் முப்பெரும் விழா நிகழ்வும் கௌரவிப்பும்

by Gayan Abeykoon
February 15, 2024 9:21 am 0 comment

ம்பளை அல் மத்ரஸதுல் ஹக்கீமியா கல்வி நிலையத்தின் 25ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு மாணவர்களை கௌரவிக்கும் விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் சிறார்களின் கலாசார நிகழ்வு என முப்பெரும் விழா கம்பளை வைட் விங்ஸ் மண்டபத்தில் கல்வி நிலையத்தின் முதல்வர் ஹுசைன்தீன் பலாஹி  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக மாத்தளை மாவட்ட  வைத்திய அதிகாரி  வைத்தியர்  எம். ஐ. எம். லரீப் கலந்து கொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதியாக மஹஜன குரூப் கம்பனியின் தவிசாளர் நஸார் உடையார்,  நஸாப் நஸார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விசேட பேச்சாளராக அகில இலங்கை வை. எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீத் எம். ரிஸ்மி  கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஊர் பிரமுகர்கள், பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட பெரு எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மாத்தளை மாவட்ட காச நோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகரி எம். ஐ. எல்.எம். லரீப் உரையாற்றும் போது;  எவ்வளவு நிகழ்வுகளுக்கெல்லாம் சென்றுள்ளேன். ஆனால் இந்த நிகழ்வின் வித்தியாசம் என்னவென்றால் எல்லா மொழிகளிலும் மிகவும் சரளமாகப் பேசுகின்ற மாணவர்கள் இருக்கிறார்கள். கண்டி மாவட்டத்தில்  கடந்த 10 வருடமாக சமூகப் பணிகள் ஆற்றி வந்துள்ளேன். பல நிகழ்வுகளில்  கலந்து கொள்வது வழக்கம்.  குறிப்பாக ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடத்துவோம். அதில் எல்லா சமூகத்தவர்களைச் சார்ந்த ஆசிரியர்களும்  கலந்து கொள்வர். அப்போது மாலைவேளையில்  அவர்களுக்கு குழுவேலைத் திட்டம் நடைபெறும். அவ்வாறான நேரத்தில் படித்தவர்கள் முன்வந்து பேச மாட்டார்கள். அவர்களுக்கு கற்பிக்கத் தெரியும். ஆனால் அவர்களுக்கு அவ்விடத்தில் பயன்படுத்தப்படும் மொழி தெரியாது.

ஐந்து, ஆறு வயதுப் பிள்ளைகள் தங்களுடைய திறமையை இங்கு  காட்டும் போது மனதிற்கு மிக்க மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருக்கின்றது. அதாவது மேடை கூச்சம் என்பது இல்லாமற் போக வேண்டும். அறிவு சார்ந்தவர்களாக  மட்டும் போதாது. அதனை வெளிப்படுத்துவதற்கான மொழித் தேர்ச்சியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கே ஐந்து, ஆறு வயதுப் பிள்ளைகள் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டுகிறார்கள். மிக சிறப்பாக இருந்தது. மேடைக் கூச்சம்  கொஞ்சம் கூட அவர்களிடத்தில் காணப்படவில்லை.

எமது சமூகத்தில்  மருந்து எடுப்பதற்காக  உம்மாவும் மகளும் சென்றால் உம்மாதான்  நோய் பற்றி வைத்தியரிடம் சொல்வார். உம்மா படித்திருக்க மாட்டார். மகளுக்குள்ள நோயை உம்மாதான் சொல்வார். உம்மா சொல்லுகின்ற நோயைத்தான் வைத்தியர் கேட்க வேண்டும். மகள் க. பொ. த உயர் தரம் கற்றவர். ஆனால் தாய் பெரியளவில் கற்கவில்லை. என்றாலும் நோயாளியை மருந்து எடுக்கச் செல்லும் தாய்தான் மகளின் நோய் பற்றி விளக்கமளிப்பார்.  பெண் பிள்ளைகளை நேருக்கு நேர் நின்று  பேசப் பழக விடுவதில்லை.  பழக்குவதில்லை. நோயாளியைக் காட்டச் சொன்னாலும் சரியாகக் காட்டுவதில்லை.  நான் ஒருவர் முஸ்லிம் வைத்தியர். ஏனைய வைத்தியர்கள் எப்படி இவை குறித்து சிந்திப்பார்கள்.

இன்று அந்த நிலை மாற்றம் பெற்று வருகிறது. இன்று படித்த பெண்கள் அதிகளவில் உயர் பதவி வகிக்கின்றார்கள். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் எமது முஸ்லிம் பிள்ளைகள் வளர்ந்து வருகின்றார்கள். உலகிலுள்ள  முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண் பிள்ளைகள் நன்கு படித்து உயர் பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் சகல பெண்களும் தொழில் புரிகின்றார்கள்.

ஆனால் எமது முஸ்லிம் சமூகத்தில் இன்னும் அவ்வாறு இல்லை. எமது பிள்ளைகளை சிரமப்பட்டு பாடசாலைகளுக்கு அனுப்பி படிக்க வைத்து அதற்கான பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளாமல் திருமணம் முடித்துக் கொடுத்து விடுகின்றனர்.

ரமழான் மாதம் என்பது மிகவும் புனிதமான மாதம் ஆகும். அந்த மாதத்தின் சிறப்பை அடுத்த சமூகத்தவர்களுக்கும்  எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.  குறிப்பாக  வெறுமனே பணக்கார வீடுகளில் முன்னால் வறிய  சனக் கூட்டம் கூடி  உதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்ற மாதம் என்று ஏனைய சமூகத்தினர்கள் கருதுகின்றனர். இப்படி நடவடிக்கைகளை நாங்கள் மாற்றம் செய்ய வேண்டும். அதாவது பலருக்கு உதவி செய்வதை விட ஒரு வறிய நபரைத் தெரிவு செய்து அவர் வாழ்நாள் பூராவும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளாத ஒருவராய்  மாற்றம் செய்ய வேண்டும். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவராய் மாற்றம் செய்ய வேண்டும். இதேபோன்றுதான் கல்வியும் ஆகும்.

கல்வியை வழங்கினால் தானாக அந்தக் குடும்பம் முன்னேற்றம் காணும். எந்த நாளும் உதவிகள் செய்து கொண்டு இருக்கத் தேவையில்லை. எல்லோரும் உதவி செய்யக் கூடியவர்களாக மாற வேண்டும். அந்த மாற்றம் தான் எமக்குத் தேவை.

அரச அலுவலகங்களுக்குச் சென்று தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு சிங்கள மொழி அறிவு மிக முக்கியமாகும். ஒரு விண்ணப்பப்படிவத்தை நிரப்புவதற்கு பல சிரமங்களை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம். எனவே நாம் எமது பிள்ளைகளை சிங்கள மொழிக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்களாக உருவாக்க வேண்டும். எமது தனித்துவமான கலாசார சூழல்களுடன் எமது சமூகத்திலுள்ள பிள்ளைகள் எல்லாத் துறைகளிலும் கடமையாற்ற வேண்டும். கல்வியானது ஒரு போதும் வீண் போவதில்லை. அரச துறையிலோ அல்லது வேறு எந்த தனியார் துறையிலோ  சரி தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு ஏனைய சமூகத்தோடு சரி சமனாக வாழும் நிலைக்கு எமது பிள்ளைகளை உருவாக்குவது கட்டாயக் கடமையாகும். சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருந்து கொண்டிருக்கிறது.

எல்லாத் துறைகளிலும் எமது சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் தொழில் புரிய வேண்டும். இது மிக மிக அவசியம்.  குறிப்பாக எல்லா மொழிகளையும் சரளமாகப் பேச வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

கம்பளை அல் மத்ரஸதுல் அல் ஹக்கீமிய்யாவின்  அத்தியட்சகர் இஹ்திசான் ஹுஸைன்டீன் உரையாற்றும் போது;

எங்களிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பணம், அதிகாரம், செல்வாக்கு இருந்தாலும் இறுதியில் நாம் செல்லும் இடம் நிலத்திலுள்ள மரணப் புதை  குழியாகும். இன்று மிக முக்கியமாக  எமது பிள்ளைச் செல்வத்திடம்  நாங்கள் விதைக்க வேண்டியவைகளாக அறிவு சார்ந்த வித்துக்களே உள்ளன. எமது  பிள்ளைகளை சரியான முறையில் இஸ்லாமிய மார்க்க விழுமியங்களுடன்  வளர்த்தோம் என்று சொன்னால்  உலகத்திலும் மறுமையிலும் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்.

நாங்கள் எமது பிள்ளைகள் அழகாக உடுக்க வேண்டும். படிப்பில் திறமை காட்ட வேண்டும். உயர்ந்த மனிதனாக  வாழ  வேண்டும் என்று நாம் கனவு காணுகின்றோம். அதேவேளையில் நாம் மரணம் எய்தும் போது தனது மரணத்தை முன்னின்று தொழுகை நடத்த வேண்டும் என்று கனவு காண்பவர்கள் யாருமில்லை. தன் தந்தையின் மரணத்தை மகன்தான் தொழுகை நடத்த வேண்டும். தன் தந்தை மீது  மகன் கவலைப் பட்டு பிரார்த்தனை செய்யும் போது  மற்றவர்களுக்கு அது ஈடாக அமையாது.  மரியாவத்தை என்ற பகுதியில் எங்களது மத்ரஸாவில் கல்வி பயின்ற பிள்ளைகள் இன்று பெரிய  உலமாக்களாக இருக்கின்றார்கள். மரியாவத்தை என்கின்ற கிராமம் மார்க்க விடயத்தில் முன்னணிமிக்க  எழுச்சி பெற்ற கிராமமாக சிறப்புற்று விளங்குகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

அதிபர்  பீ.எம். ஹுஸைன்தீன் (பலாஹி)  தலைமையுரையாற்றும் போது; 

நாகரீகமான  மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஊரில் உள்ள மத்ரஸாக்களின் பங்கு அளப்பரியது. அது வெறுமனே மார்க்கக் கல்வியை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதல்ல.  மாறாக, நல்ல பழக்க வழக்கங்களையும், அறிவொழுக்கங்களையும் நல்ல தலைமைத்துவப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.  கடந்த 25 ஆண்டு காலமாக எமது பிரதேசத்திலுள்ள பிள்ளைகளுக்கு சிறந்த மார்க்கக் கல்வியைப் புகட்டுவதோடு  உலகில்  நற்பிரஜைகளாக வாழ்வதற்காக அளவிட முடியாத பாரிய சேவைகளை  எமது மத்ரஸா ஆற்றி வந்துள்மை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பல நூற்றுக்கணக்கான மாணவர் சமூகத்தை எமது மத்ரஸா அறுவடை செய்துள்ளன. பல்வேறு  தனியார் உயர் துறைகளிலும் அரசாங்க அலுவலகங்களிலும், சுயமான வியாபார நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றார்கள்.  அல் மத்ரஸதுல் ஹக்கீமியாவானது 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு,  பாடசாலை பின்னாரான பகுதி நேர மத்ரஸாவாக 25 வருடங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் பகுதி நேர மத்ரஸாவாக ஆரம்பிக்கப்பட்டு இது இன்று குர்ஆனை மனனம் செய்யும் பிரிவு, பெண் மாணவர்களுக்கான ஷரீஆ வகுப்புகள் மற்றும் பெற்றோர்களுக்கான வகுப்புகள், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விழுமியங்கள் வழங்கும் வழிகாட்டல் நிகழ்வுகள் என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் தமிழ் மொழி மூலம் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது மாணவர்களுக்கு தமிழ், சிங்கள, ஆங்கிலம் போன்று மும் மொழிகளிலும் பாடங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது. அதேபோல்,  எம் மத்ரஸா  மரியாவத்தையில் அமையப்பெற்றாலும் கம்பளை பிரதேசத்தின் அனைத்து பாகங்களிலுமிருந்து பிள்ளைகள் வருவதோடு, தேசிய பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளும் மத்ரஸாவில் பாடங்களை கற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

எமது மத்ரஷாவின் பிரதான நோக்கமானது மாணவச்செல்வங்களை தங்கள் பாடசாலை  முடிந்ததன் பின்னரான நேரத்தில் வழிப்படுத்தி, அவர்களை சரியான முறையில் வழிகாட்டி நாட்டுப்பற்றுள்ள தலைமைத்துவ பண்புகளுடன் கூடிய, சமூகத்தை நன்கு மதித்து நடக்கக் கூடிய சிறந்த பிரஜையாக மாற்றுவதே ஆகும். அந்தடிப்படையில் ஆரம்பிக்க பட்டதுடன் இதிலிருந்து  இன்றுவரை எங்களுடன் குர்ஆன் மத்ரஷாவில் பயிற்றப்பட்டு,  படித்து கிட்டத்தட்ட 27 ஹாபிழ் உலமாக்கள் மற்றும் 06 பல்கலை கழக மாணவர்களுடன், ஏனைய பல துறைசார் நிபுணர்கள் சமூகத்தில் நற்பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் எங்கள் எதிர்கால வேலைத்திட்டங்களாக, மார்க்க அறிவு என்பது கட்டாயம் எல்லா வசதிகளுடனும் கற்பிக்க பட வேண்டும் என்பதால்  முழு நேர வகுப்பாகவும் மாற்ற செயற்பாடுகளை செய்து வருகிறோம். அதேபோல் முழு நேர பாலர் பாடசாலையும், பெற்றோர்களுக்கான மொழி சார் வழிகாட்டல் நிகழ்வுகள் என்று பல வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளோம்.

25 ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்க கல்வியின் மூலம் தேர்ச்சி பெற்ற மாணவ சமூகத்தை உருவாக்கியதோடு   ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கம், சகவாழ்வு, ஒழுக்கம், பெரியோரை மதித்தல், தலைமைத்துவப் பண்புகள் போன்ற விடயங்களைப் போதிக்கின்ற கல்விக் கூடமாகவும் சிறார்களுடைய மன எழுச்சியை மகிழ்வூட்டுகின்ற அறிவுக் கூடகமாகவும்  இந்த மத்ரஸா காணப்படுகின்றது.

இவ்வாறு எமது கல்வி நிலையம் சிறார்களின் இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக்காக எந்த தங்கு தடைகளுமின்றி    சேவையாற்றி வருகின்றன. அதனால் தான்   மக்களின் மனதை வென்று  இன்றுவரை உயர்ந்து நிற்பதைக் காணுகின்றோம். இந்த மத்ரஸாவின் வளர்ச்சிக்கு முதன் முதலில் உதவி வழங்கியவர் மறைந்த அமைச்சர் ஏ. ஆர். எம். காதர் ஹாஜியாராவார்.  அதனைத் தொடர்ந்து தனவந்தர் நஸார் ஹாஜியார் அவர்களும் ,  அவரது மகன் மற்றும் நலன் விரும்பிகள், ஊர் பள்ளிவாசல்கள் என  ஆற்றி வரும்  பங்களிப்பு அளப்பரியது.  இந்தச் சந்தர்ப்பத்தில்  அனைத்து தரப்பினர்களுக்கும் நான்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் விசேட வளவாளராகக் கலந்து கொண்ட வை.வை.எம்.எம்.ஏ. பேரவையின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி உரையாற்றும் போது;

21 ஆம் நூற்றாண்டு அறிவு சார் நூற்றாண்டாக பரிணமித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோமா. எனவே அறிவு சார் ஒரு சமூகத்தைத்தான்  நாங்கள் எதிர்பார்க்கின்றோம். உலகமும் இன்று செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் எனவும் டிஜிட்டல் புரட்சிகரமான தொழில் நுட்பம் எனவும் சொல்லுகின்றோம். ஆனால் நாங்கள் அதற்குத் தயாராகின்றோமா? மாறாக, எங்களுடைய இளைஞர்கள்  அவர்களுடைய நிலைப்பாடானது  இந்த தொழில் நுட்பத்தை அவர்கள் தவறாகப் பாவித்து  அவர்களுடைய நிலை அதலபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. எனவே  அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் நாங்கள். அந்த வகையிலே  விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் யார்? ஆசிரியர்கள்,  உலமாக்கள்.  அதேபோன்று,  பெற்றோர்கள். நாங்கள் விழித்துக் கொண்டோமா அப்படியென்றால் இவர்களை  வழிநடத்தக் கூடிய ஆசிரியர்கள் உலமாக்கள் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாங்களும் வளர வேண்டும். எங்களுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமகாலத்தில் உள்ள தகவல் தொழில் நுட்பத்தோடு  நாங்கள் சென்று இவர்களை வழி நடத்தக் கூடியவர்களாக  நாங்கள் வளர வேண்டும். நாங்கள் ஆயத்தமாக வேண்டும். அப்போதுதான் வேகமாக வளரக் கூடிய இளைஞர்களை  எங்களால் வழிநடத்தலாம்.

2018, 2019 களுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் பாரியதொரு சவாலை எதிர்நோக்கியிருந்தனர். அதே கால கட்டத்தில் மத்ரஸாக்கள் முதல் பல முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கியிருந்தனர். அக்கால கட்டத்தில் மத்ரஸாக்களை நிறுத்துவதற்கும் தடை செய்வதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இலங்கையில் மத்ரஸாக் கல்வி முறைக்கு  புதிய சட்டவரைபு, ஒழுங்குமுறை, மேற்பார்வை, கட்டுப்பாடு மற்றும்  அமுலாக்கம் என்ற அடிப்படையில் ஒரு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அதில் மத்ரஸா கல்வி சபை ஒன்று நிறுப்பட இருக்கின்றது.  அதற்கான தனியாக அலுவலகம் திணைக்களம் ஆரம்பிக்கப்படலாம்.  மத்ரஸா பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கபட இருக்கின்றது.  ஹிப்லு மத்ரஸாக்கள் தனியாகவும் அரபு மத்ரஸாக்கள் தனியாகவும் வகைப்படுத்தப்பட இருக்கின்றன என தெரிவித்தார்.

 

கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட மஹஜன குரூப் கம்பனியின் தவிசாளர் நஸார் உடையார் உரையாற்றும் போது; 

இம் மத்ரஸாவின் அதிபர் என்னிடம் வந்து தனிப்பட்ட விவகாரம் எவையும்  பேசியதில்லை. அவர் என்னிடம் கேட்பதெல்லாம் இந்த மத்ஸா பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் குறித்தே பேசுவார். கதைப்பார்.  இங்கு கல்வி பயிலும் அனைத்துச் சிறார்களும் மரியாவத்தையின் முத்துக்கள்.

மும்மொழிகளிலும் இங்கு கற்பிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும். இந்த மத்ரஸாவின் அதிபருடைய முழு மூச்சும் இம்மத்ரஸாவை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்று அர்ப்பணிப்போடு சேவையாற்றி வருகின்றார்.

அது அவருடைய தாய் தந்தையின் அவாவாகும். எனவே இந்த நல்ல முயற்சிகளுக்கு எம்மால் ஆன அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT