காச நோயால் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள் | தினகரன்


காச நோயால் பெண்களுக்கு ஏற்படும் உபாதைகள்

காச நோய் என்பது மைக்கோபாக்றீரியம் என்னும் பக்றீரியா கிருமியால் தோற்றுவிக்கப்படும் நோயாகும். இது உலகலாவிய ரீதியில் மிகப்பெரும் தொற்று நோயாகவும் விளங்குகிறது. இந்நோய்க்கு உலக அளவில் ஒரு நாளைக்கு சுமார் 4,400பேர் உள்ளாகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

இந்த காச நோய், பெரும்பாலும் நுரையீரலை தான் முதலில் பாதிக்கும். அடுத்தகட்டமாக கருப்பையைப் பாதிக்க முடியும். அத்தோடு பலோபியன் குழாயையும் தாக்கலாம். இதன் விளைவாக குழந்தையின்மை பிரச்சினை ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

காச நோயை தோற்றுவிக்கும் இந்த மைக்கோபாக்றீரியம் கிருமி கருப்பையைப் பாதிக்கும்போது அது பிறப்புறுப்புக் காச நோயாக மாறுகிறது. இதனால் குழந்தை கருப்பையில் தங்குவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கரு இறந்துவிடும். ஆண்களை விடவும் பெண்களில் பலர் இந்த பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் சிலருக்கு கருப்பைக் குழாய் மிகவும் அடர்த்தியாக மாறி, கருப்பையில் கருவை உட்செலுத்த முடியாத நிலைமை ஏற்படுவதோடு இடைநடுவில் நின்று இயற்கையாகவே கருக்கலைப்பு ஏற்பட்டுவிடும். 

அதேநேரம் இந்த பக்றீரியா குருதியில் கலந்து ஏனைய உறுப்புகளையும் தாக்க முடியும். குறிப்பாக இனப்பெருக்கம் இடம்பெறும் உறுப்புகளான பலோபியன் குழாய், கருப்பை ஆகியவற்றையும் இப்பக்றீரியா தாக்க முடியும்.

ஒருவேளை பெண்களுக்கு காசநோய் தாக்க அறிகுறிகள் தென்பட்டால் அல்லது குறைந்த அளவில் பலோபியன் குழாயை பாதித்திருக்கும் அறிகுறிகள் தென்பட்டால் தாமதியாது மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்விடயத்தில் கவனயீமாகவோ அசிரத்தையாகவோ நடந்து கொள்ளக்கூடாது. இல்லாவிடில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவகையிலான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரலாம். குறிப்பாக குழந்தை கிடைக்கப்பெறாத தன்மையும் கூட ஏற்பட்டு விடலாம். அதனால் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.  

அதேநேரம் இவ்வகைக் காசநோய்க்கு உள்ளாகி இருப்பவர்கள் மத்தியில் ஒழுங்குமுறையற்ற மாதவிடாய், அடிவயிற்றில் அதிக வலி, அதிகப்படியான குருதிப்போக்கு, அதிக துர்நாற்றம், உடலுறவிற்குப் பின் குருதிப்போக்கு போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படலாம்.  

ஆகவே காசநோய் தொடர்பில் பெண்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இது முழுமையாகக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோயாகும்.

அதற்கான சிகிச்சைகள் புழக்கத்தில் உள்ளன. என்றாலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏராளமான இந்தியப் பெண்கள் பிறப்புறுப்பு காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2011இல் 19வீதம் என்றபடி காணப்பட்ட போதிலும் 2015இல் 30வீதம் வரை அதிகரித்துள்ளது எனச் சுட்டுக்காட்டியுள்ளது. ஆனால் காச நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம்.

இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் கவனம் செலுத்தி தகுந்த மருத்துவர்களை அணுகி உரிய ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அப்போது நோயை முழுமையாகக் குணப்படுத்தி விடலாம்.


Add new comment

Or log in with...