மட்டக்களப்பில் மகளிர் உதைபந்தாட்டத்தில் பன்சேனை மகளிர் அணி சம்பியன் | தினகரன்


மட்டக்களப்பில் மகளிர் உதைபந்தாட்டத்தில் பன்சேனை மகளிர் அணி சம்பியன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிரை உதைபந்தாட்டத்துறையில் ஊக்குவிக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் வேண்டுகோளுக்கமைய புலம்பெயர்தோருக்கான சர்வதேச அமைப்பான ஐ.ஒ.எம் நிறுவனம் நடாத்திய மகளிருக்கான உதைபந்தாட்டசுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் வவுணதீவு பன்சேனை விளையாட்டுக்கழக மகளிர் அணி 4க்கு0 என்ற அடிப்படையில் கோல்களைப் புகுத்தி சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டது.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட திட்டத்தின் கீழ் கனடா நாட்டு நிதி உதவியில் இடம் பெற்ற இந்த இறுதிப் போட்டிக்கு தன்னாமுனை மகளிர் விளையாட்டுக்கழக அணியும் பன்சேனை மகளிர் விளையாட்டுக்கழக அணியும் மோதிக்கொண்டன.இதில் தன்னாமுனை மகளிர் விளையாட்டுக்கழக அணி எவ்வித கோல்களையும் பெற்றிராத நிலையில் பன்சேனை மகளிர் விளையாட்டுக்கழக அணி சாம்பியன் கிண்ணத்ததை சுவீகரித்துக் கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு சபையின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார் விடுத்த வேண்டுகோளில் இந்த சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டதுடன் இச்சுற்றுப்போட்டியில் பங்கேற்ற வீராங்கணைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் சத்துணவு வசதிகள் மற்றும் விளையாட்டு பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை மட்டக்களப்பு பிரதிபொலிஸ் மா அதிபர் அயச கருணாரத்தின ,மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் பிரதம கணக்காளர் ஜகதீஸ்வரன், திட்டமிடல்பணிப்பாளர் திருமதி.சசிகலாபுண்ணியர்த்தி, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்வே.ஈஸ்பரன், மண்முனைமேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...