ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று கொழும்பில் சந்திப்பு | தினகரன்


ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று கொழும்பில் சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று கொழும்பில் கூடவுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று பாராளுமன்றக் கட்டத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது.

பாராளுமன்றக் குழு கூட்டத்தில் சமகால அரசியல் நிலமைகள் மற்றும் எவ்வாறு முடிவுகளை எடுக்க வேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நீண்ட உரையொன்றை நிகழ்த்தினார்.

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் இறுதி முடிவை வேட்பாளர்களுடன் பேச்சுவார்தை நடத்தி வெளியிடவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது. அத்துடன், 13அம்சக் கோரிக்கைகளை தயாரித்துள்ள கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகளும் கூடி இறுதி முடிவை எடுக்க வேண்டுமென அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதன் பிரகாரம் இன்று முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்துவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடவுள்ளதாக கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லையென இதுவரை அறிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...