சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படின் தேசிய அரசுக்கு ஆதரவளிப்போம் | தினகரன்


சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படின் தேசிய அரசுக்கு ஆதரவளிப்போம்

பாடசாலை கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் இராதாகிருஷ்ணன்

சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமானால் அதனை நான் வரவேற்பேன்.அதுவின்றி வெறுமனே அமைச்சர்களை மாத்திரம் அதிகரிப்பதற்காக இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமானால் அதனை நான் ஏற்றுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தெரிவிக்கவோ மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா பெய்ன்டர்ஸ் ஞாபகார்த்த கல்லூரியில் 'கல்வி அமைச்சின் அண்மையிலுள்ள   பாடசாலை சிறந்த பாடசாலை'  எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 150இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலைக்கான கட்டிடத்தை திறந்து வைத்து   உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் ரணசிங்க பண்டார தலைமையில் நேற்று (07)  நடைபெற்ற இவ் வைபவத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர். இராஜாராம்,  நுவரெலியா உதவி கல்விப் பணிப்பாளர்களான எம். மோகன்ராஜ்,   ஜானக்க சரத் சந்திர ஆகியோருடன் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர். 

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,  

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அமைச்சர்களின் எண்ணிக்கை கூடுமாக இருந்தால் எனக்கும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு கிடைக்கும். ஆனால் எனக்கு அமைச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.தேசிய அரசாங்கத்தின் மூலமாக எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது நன்மை நடக்குமாக இருந்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.அதைவிடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தேசிய அரசாங்க யோசனை முன்வைக்கப்படுமானால் அதனை எற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை.   வரலாற்றில் பல கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.ஆனால் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டு ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் மாறியிருக்கின்றது.வழமையாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்பு அதனை வெற்றியாக கொண்டாடுவதே வழக்கம். ஆனால் இந்த முறை கைச்சாத்திட்ட பின்பும் அதற்கான எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்கின்றன.  வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை அரசாங்கம் தற்காலிகமாக  இடைநிறுத்தம் செய்துள்ளது.இதற்கு காரணம் அரசாங்கத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கொடுத்துள்ள அழுத்தம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் கோரியுள்ளது போல 140.00 ரூபாவை அரசாங்கம் வழங்க மறுத்தால் நாங்கள் அமைச்சு பதவிகளை துறப்பது என்பது நிச்சயமாக நடக்கும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றார்.

நுவரெலியா தினகரன் நிருபர் 


Add new comment

Or log in with...