வெள்ளை வேன் கலாசாரத்தை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் | தினகரன்


வெள்ளை வேன் கலாசாரத்தை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்

நாடு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடம் செல்லுமானால் கடந்த காலத்தில்  காணாமல்போதல்கள், வெள்ளை வேன் கலாசாரங்களை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். நாடு வறுமை நிலைக்கு   தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரிக்கும் முதலாவது கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை மட்டக்களப்பு கிரான்குளத்தில் நடைபெற்றது. 

சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் பகுதிக்கான முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. 

சஜித் பிரேமதாச ஜெனரேசன் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஜெகவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்  பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மங்கள செனவிரட்ன, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சுவர்ணராஜா உட்பட பெருமளவான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த  முன்னாள் ஆளுனர், 

கடந்த காலத்தில் கடத்தல்கள், காணாமல் போதல்கள், வெள்ளைவான் கலாசாரங்களை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இந்த நிலையினை மீண்டும் ஏற்படுவதற்கு நாங்கள் அனுமதிக்கமுடியாது. நாங்கள் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்காவிட்டால் மீண்டும் அந்த யுகம் ஏற்படுவதை தடுக்கமுடியாமல்போகும். 

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டதுடன் திறைசேரியும் வெறுமையாக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தபோதே இந்த நிலை மாற்றப்பட்டது. மீண்டும் அந்த ஆட்சியேற்படுமானால் இந்த நாடு மீண்டும் வறுமை நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து காணப்படுகின்றது. அந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது. 

இந்த நாட்டின் வளங்களை சூறையாடுபவர்கள் தேவையில்லை, கொள்ளையர்கள் தேவையில்லை. இந்த நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாக நேசிக்கக் கூடிய, நேர்மையான முறையில் செயற்படக்கூடிய தலைவர் ஒருவரே தேவை. அந்த தலைமைத்துவமே  சஜித் பிரேமதாச என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...