கோட்டாபய வெற்றி பெற்றால் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 | தினகரன்


கோட்டாபய வெற்றி பெற்றால் தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 1,000

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்றால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சுப்பையா சதாசிவம் தெரிவித்துள்ளார்.  

நுவரெலியா கூட்டுறவு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது போல் தோட்டத்தொழிலாளர்களின்   முயற்சியால் கட்டப்படும் வீடுகளுக்கும் உறுதிப்பத்திரங்கள் வழங்க வேண்டும். இன்று பெருந்தோட்ட பகுதிகளில்அரசாங்கத்தின் உதவி இல்லாமல் தொழிலாளர்களின் சொந்த பணத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த வீடுகளுக்கும் அரசாங்கம் வீட்டுறுதிகளை வழங்க வேண்டும். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் சேவையாற்றியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆட்சி காலத்திலே பெருந்தோட்ட மக்களின் தேவைகளை கவனிப்பதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கென ஒரு அமைச்சரையும் நியமித்து பல அபிவிருத்தி பணிகளை பெருந்தோட்டப் பகுதியில் செயல்படுத்தியது. ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி ஆட்சி காலத்திலேயே பெருந்தோட்ட பகுதிகளுக்கு தமிழ் கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டார்கள்.இவர்களின் காலத்திலே பெருந்தோட்டப்பாதைகள் கொங்கிறீட் பாதைகளாக புனரமைக்கப்பட்டன. அதே போல சுகாதாரம், கல்வி, பொருளாதார அபிவிருத்திக்கு பெரும் சேவையாற்றினார்கள். ஐக்கிய தேசியகட்சி கடந்த பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாலேயே 

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அதே போல எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து ஸ்ரீ லங்கா பொது ஜனபெரமுனவிற்கு வாக்ககளிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.  

தலவாக்கலை குறூப் நிருபர்   


Add new comment

Or log in with...