வர்த்தகர்களை பாதிக்கும் சிக்கலான வரி வசூலிப்பை இலகுவாக்க வேண்டும் | தினகரன்


வர்த்தகர்களை பாதிக்கும் சிக்கலான வரி வசூலிப்பை இலகுவாக்க வேண்டும்

நாட்டை வர்த்தகத்துறையில் முன்னேற்றுவதென்றால் அனைத்து வர்த்தகர்களையும் பாதிக்கும் சிக்கலான வரி வசூலிப்பு முறையிலிருந்து இலகுவான முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். 

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்:  

தேயிலை தொழிலில் ஈடுபட்டு வரும் ஆநேகமானோர் என்னிடம் கூறியது என்னவென்றால் இத்தொழிலின் மூலம் 5 பில்லியன் டொலர் வருமானம் பெற முடியும் என்பதாகும். எமது இலக்கு அதுவாகவே இருக்க வேண்டும். தேயிலை, இறப்பர், தென்னை மிகவும் முக்கியமான அன்னிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் தொழில்களாகும். நாம் உலகை நோக்கினால் உலகில் தேயிலைக்கான மதிப்பு குறைந்துள்ளது. நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும். வேறு நாடுகளிலிருந்து தரக்குறைவான தேயிலையை இறக்குமதி செய்து மீண்டும் அதனை ஏற்றுமதி செய்வதால் எமது பெறுமதி வாய்ந்த தேயிலைக் கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதென நம்புகின்றேன். சிலோன் தேயிலை என்ற அந்த தரத்திற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்த போது இலங்கையிலிருந்து தேயிலை கொண்டுசென்று வெளிநாட்டவர்களுக்குப் பரிசளிப்பேன். ஒருநாள் எனது நண்பர் ஒருவர் தேயிலையைக் கொண்டுவந்து கொடுத்தார். அது கடையில் வாங்கியவொன்று. உண்மையில் அது தேயிலை அல்ல. அவரது மனதில் அந்தக் கடையில் பெற்ற தேயிலையே சிறந்தது என எண்ணியிருந்தார். அன்று நான் தேயிலை என்றால் என்ன அது எவ்வாறு இரசித்துக் குடிப்பது என்ற தகவல்களைக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. நாம் தற்போது புதிய சந்தைபற்றி எண்ண வேண்டும். பிரித்தானியா எமது தேயிலைக்கு பழகிவிட்டதென்பதை நாம் அறிவோம். நாம் புதிய வர்த்தக சந்தைக்கு உட்படும்போது சிலோன்டீயை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எமது தேயிலைக்கு சந்தையொன்றை உருவாக்க வேண்டும். எமது தேயிலை வர்த்தகத்தின் வருமானத்தை அதிகரிக்க இவ்வாறான தரமான தேயிலையை சந்தைக்கு கொண்டு சென்றால் மாத்திரமே முடியும். 

இது தனியார் துறைக்கு மாத்திரம் செய்யக்கூடிய விடயமல்ல. நிச்சயமாக அரசாங்க அனுசரணை கிடைக்க வேண்டும். 5 பில்லியன் டொலர்களை இலக்காகக் கொண்டு இந்நிலைமையின் மூலமே பயணிக்க முடியும். தேயிலை எமது நாட்டின் பிரதான ஏற்றுமதியாக இருந்தாலும் தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிகின்றது. நாம் இது பற்றியும் சிந்திக்க வேண்டும். தோட்டப்புற இளைஞர், யுவதிகள் எப்போதும் தோட்டத்திலேயே இருக்கிறார்கள். அது மனிதத்தன்மையல்ல. அவர்களுக்கும் முன்னோக்கிவர கைகொடுக்க வேண்டும். குருநாகலில் உள்ள எல்லோரும் தேய்காய் பறிக்கிறார்களா? கயிறு திரிக்கிறார்களா எனக் கேட்கிறார்கள். அப்பிரதேசங்களிலிருந்து டொக்டர்கள், இன்ஜினியர்கள் போன்ற படித்தவர்கள் உருவாகிறார்கள். அவ்வாறென்றால் இத் தோட்டங்களில் உள்ள மக்கள் தேயிலை கொழுந்து பறிக்க மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்? இந்நிலைமையிலிருந்து விடுபட்டு தொழிலுக்குச் செல்ல, கல்வி கற்க, டொக்டர்கள், இன்ஜினியர்களாக வர அவர்களும் விரும்புவர். அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். 

எமது நாட்டில் தேயிலைத் தோட்டங்களில் நூற்றுக்கு 70 வீதமானவை சிறு தேயிலைத் தோட்டங்களாகவே உள்ளன. நாம் இந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பயிர்செய்ய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாரிய தேயிலைத் தோட்டங்களின் சில காணிகளை அங்குள்ள தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு விடயம் இலாப பங்கீட்டின் போது இயந்திர மயமாக்கல் மூலம் எவ்வாறு எமது நடவடிக்கைகளை செயல் திறன் மிக்கதாக்குவது என்பதாகும். அறுவடையை அதிகரிக்கும் முறைகள் பற்றி பேசப்படுகின்றது. அதன் மூலமாகத்தான் தேயிலைத் தொழிற்சாலையை மேம்படுத்தவும் அதன் வருமானத்தை அதிகரிக்கவும் கூடியதாகவுள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிக் பேசும் போது அவர்களின் சம்பள உயர்வு பற்றிக் கதைக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் 1000 ரூபா சம்பளம் வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால் அது அவ்வாறு நடைபெற்றவில்லை. அதை வழங்க வேண்டும். தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பெரும் பிரச்சினைகள் உண்டு. தற்போது பெரிய தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும் நவீன மயப்படுத்தவும் அரசாங்கம் தலையிட வேண்டும். அதற்குத் தேவையான ஆரம்ப முதலீட்டுக்கடனை பெற்றுக்கொள்ளவும் வரி சலுகையை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் எமக்குக் கிடைக்கும் நன்மை என்னவென்று பார்க்கவேண்டும். நாம் உர மானியம் வழங்குவோம் என்று உறுதியளித்தோம். அது தேர்தல் வாக்குறுதியல்ல. அதன் மூலம் விவசாயிகள் தைரியமடைவார்கள். தரிசாகியுள்ள வயல்களில் மீண்டும் பயிர்ச்செய்வார்கள். அதன் மூலம் நல்ல அறுவடையும் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். நாடும் தன்னிறைவு அடையும்.   இந்த அரசாங்கம் வந்த பின்னர் விவசாயத்தை மேம்படுத்த எதனையும் செய்யவில்லை. செலவைப் பார்க்கும்போது சிறு தொகை இலாபமே கிடைக்கிறது. நெல்லுற்பத்திக்கு செலவிடும் பணத்தின் மூலம் அரிசியை இறக்குமதி செய்தால் இலாபம் என்று ஆலோசகர்கள் கூறியதை நம்பியதால் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவியது. எதிர்காலத்தில் முழு உலகிலுமே உணவுப் பாதுகாப்பது என்பது முக்கிய விடயமாக மாறிவிடும். அப்போது அரிசி மாத்திரமல்ல ஏனைய பொருட்களையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவராமல் எமது நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வேணடும்.     


Add new comment

Or log in with...