மும்பையின் 17 வயது இளம் வீரர் சாதனை | தினகரன்


மும்பையின் 17 வயது இளம் வீரர் சாதனை

17 பவுண்டரி, 12 சிக்சருடன் இரட்டை சதமடித்து

விஜய் ஹசாரே கிண்ண மும்பை அணிக்காக விளையாடி வரும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ஜர்க்கண்ட் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை அணி நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரராக களம் இறங்கிய மும்பை அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

17 வயது ஆகும் (17 வருடம் 292 நாட்களே) ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ஓட்டங்கள் குவித்தார். இதில் 17 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன்புதான் கேரளா அணியின் சஞ்சு சாம்சன் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த விஜய் ஹசாரே டிராபியில்தான் அறிமுகம் ஆனார். இவர் ஐந்து போட்டிகளில் மூன்று சதங்கள் மூலம் 504 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...