ஞானசாரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு | தினகரன்


ஞானசாரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

செம்மலை நீதிமன்ற அவமதிப்பு

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணி அருகில் தேரரின் உடலை தகனம் செய்த விவகாரத்தில் நீதிமன்ற கட்டளை மீறப்பட்டமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.  

நீதிமன்ற கட்டளை மீறப்பட்டமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்த மனு மீதான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்தது.  

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி உயிரிழந்த நிலையில் அவரது இறுதி கிரியைகளை ஆலய வளாகத்துள் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  

இவ் வழக்கில் தேரரின் இறுதி கிரியைகளை ஆலய வளாகத்துக்குள் செய்யக் கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் நீதிமன்றின் இவ் உத்தரவினையும் மீறி தேரரின் உடல் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் தகனம் செய்யப்பட்டதுடன் இதனால் அப் பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.  

இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா நீதிமன்ற உத்தரவை மீறியதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.    பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தாம் அவ்விடத்துக்கு சென்றிருந்ததாகவும், குறித்த மூவரும் நீதிமன்றத்தை அவமதித்ததாக ஏன் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தை கூற வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டார்.    இந் நிலையில் இம் மனுமீதான விசாரணையானது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஜயசாந்த கோட்டாகொட மற்றும் அர்ஜீன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.  

இதன்போது மனுத்தாரர்கள் சார்பாக சட்டத்தரணி கேசவன் சயந்தனுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். மனுமீதான விசாரணையில் குறித்த சம்பவம் தொடர்பாக ஞானசார தேரர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய மூவரையும் எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டனர். 

ரி.விரூஷன்   


Add new comment

Or log in with...