கிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும் | தினகரன்


கிறிஸ்தவ வாழ்வு என்பது செபமும் விடாமுயற்சியும்

கிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது.

செபம் என்பது மனித உறவை வளர்க்கும் ஓர் உன்னதமான கலை. இறைவன் முன்னிலையில் வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவதே செபம். இறை - மனித உறவில் நிலைத்திருக்கச் செபமும் விடாமுயற்சியும் இரண்டு கண்கள் போன்றது. இறைவனின் துணையில்லாமல் நமது முயற்சி மட்டும் பயனளிக்காது.

கடந்த ஞாயிறுமுதல் வாசகம் (விப. 17:8-13) செபத்தின் வல்லமைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு யோசுவா தலைமையில் போர் புரிந்தனர். மோசே கடவுளின் கோலை கையில் பிடித்தவாறு தன் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றி கிடைத்தது. கையைத் தளர விட்டபோதெல்லாம் பகைவர்கள் வெற்றியடைந்தனர். இதனால் தளர்வுற்ற மோசேயின் கைகளை ஆரோன், கூர் இருவரும் தாங்கிப் பிடிக்க வெற்றி கிட்டியது.

இயேசு தனது பணி வாழ்வு முழுவதும் தந்தையோடு உள்ள செப உறவில் நிலைத்திருந்தார். விடியற்காலையில் கருக்கலோடு எழுந்து செபித்தார். மாலையானதும் தனிமையாய் மலைக்குச் சென்று செபித்தார் (லூக். 6:12). ஒவ்வொரு நிகழ்ச்சியைத் தொடங்கு முன்பும் முழந்தாளிட்டும், கைகளை விரித்தும் கண்களை வான் நோக்கியும் முகம் குப்புற விழுந்தும் செபித்தார்.

எனவேதான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச. 5:17) என்று .

ஒரு துறவியிடம் சீடர்கள், 'மிகப் பெரிய பாவம் எது?' என்று கேட்டார்கள். துறவி சிரித்துக் கொண்டே, 'திருடுவது, பொய் சொல்வது, ஏமாற்றுவது அல்ல. மாறாக, கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டு செபிக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய பாவம்' என்றார். ஆனால் மன்றாடுவது மட்டும் போதாது மனம் தளராமல் தொடர்ந்து மன்றாட வேண்டும்.  


Add new comment

Or log in with...