உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு | தினகரன்


உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை: திருஅவையின் புள்ளிவிபரம் வெளியீடு

சிறப்பு மறைபரப்பு மாதமான அக்டோபர் 20 ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுவதையொட்டி உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிபரங்கள் மீண்டும் வெளியிட்டுள்ளது.

2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையுள்ள புள்ளி விபரங்களின்படி, திருஅவையின் உறுப்பினர்கள், திருஅவை அமைப்புகள், நலவாழ்வு மற்றும், கல்விப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, திருஅவையின் புள்ளிவிபர நூலிலிருந்து பிதேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலக மக்கள் தொகை 2017ம் ஆண்டில் 740 கோடியே 83 இலட்சத்து 74 ஆயிரமாக இருந்தது எனவும் இவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டைவிட 5 கோடியே 6 இலட்சத்து 85 ஆயிரம் அதிகம் என்றும் 2017ம் ஆண்டில் உலக கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 131 கோடியே 32 இலட்சத்து 78 ஆயிரமாக இருந்தது எனவும் இந்த எண்ணிக்கை 2016ம் ஆண்டைவிட 1 கோடியே 42 இலட்சத்து 19 ஆயிரம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் ஆசியாவில் இரண்டு திருஅவை ஆட்சிப்பீடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன, அதேநேரம் அமெரிக்காவில் ஒன்று குறைக்கப்பட்டதால் அவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டை விட ஒன்று அதிகரித்து அதற்கு அடுத்த ஆண்டில் 3017 ஆக இருந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் 5,389 ஆயர்கள் மற்றும் 4,14,582 அருட்பணியாளர்கள் இருந்தனர் என்றும் 71,305 பாலர் பள்ளிகள், 1,01,527 ஆரம்ப பள்ளிகள், மற்றும் 48,560 நடுத்தர பள்ளிகள் இருந்தன என்றும் கூறியுள்ளது.

5,269 மருத்துவ மனைகள், 16,068 மருந்தகங்கள், 646 தொழுநோயாளர் பராமரிப்பு மையங்கள், 15,735 முதியோர் பராமரிப்பு இல்லங்கள், 9,813 கருணை இல்லங்கள் போன்ற கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் நலவாழ்வு மையங்கள் பற்றிய விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் 1919ம் ஆண்டு நவம்பர் 30ம் திகதி வெளியிட்ட “Maximum illud” என்ற திருத்தூது மடலின் நூறாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில்  திருத்தந்தை பிரான்சிஸ்  2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தை சிறப்பு மறைபரப்பு மாதமாகக் கொண்டாடப்படுமாறு அறிவித்தார்.

மேரிதெரேஸா


Add new comment

Or log in with...