மொஹமட் அலி ஜின்னா உலகுக்கே முன்மாதிரி | தினகரன்


மொஹமட் அலி ஜின்னா உலகுக்கே முன்மாதிரி

'அலி ஜின்னாவின் பாத்திரம் உலகிற்கே முன்மாதிரியானது' என்கிறார் லேக் ஹவுஸ் ஊடகவியலாளரான சந்தன விஜேகோன். 

கேள்வி: அலி ஜின்னா என்ற பாத்திரம் மூலம் நூல் ஒன்றை எழுதுவதற்கு விசேட காரணங்கள் ஏதேனும் உள்ளனவா? 

பதில்: ஒரு காரணம்தான். அலி ஜின்னா பற்றி நான் அடிக்கடி வாசித்திருந்தமையாகும். அதனால் அவர் பற்றிய விடயங்கள் எனது மனதில் ஆழப் பதிந்திருந்தன. அவர் ஒரு சாதாரண முஸ்லிம் பிரஜையல்ல. அவரில் நான் வித்தியாசமான ஒரு பாத்திரத்தைக் கண்டேன். அநேகமான முஸ்லிம்கள் தமக்கேயுரிய வேறுபாடுகள் மூலம் பிரிந்திருந்தாலும், அலி ஜின்னா அவ்வாறு வேறுபட்டவரல்லர். அவர் சுதந்திரமான கருத்துகள் மற்றும் கொள்கைகளை உடையவராவார். சாதாரணமாக சுதந்திரப் போராட்டத்தால் நாம் சந்திக்கும் பாத்திரங்கள் ஆவேசமான மற்றும் புரட்சிகரமானவை என நாம் அறிவோம். ஆனால் அலி ஜின்னா அஹிம்சைவாதியாவார். அதேபோல் அவர் யுத்தத்தை விட மனித ஆத்மாவில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்த தலைவர். இந்நூலை எழுத மேற்கண்ட விடயங்களே காரணமாக அமைந்தன. 

கேள்வி: அலி ஜின்னாவின் பாத்திரத்தை நூலுருவாக்க எதனை அடிப்படை மூலமாக்கிக் கொண்டீர்கள்? 

பதில்: நான் பல தடவைகள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளேன். பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றேன். அலி ஜின்னாவின் கல்லறைக்கு நான் பாகிஸ்தானுக்கு சென்ற ஒவ்வொரு தடவையும் சென்றேன். அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களைப் பார்த்தேன். அவர் பற்றிய விடயங்கள் பற்றி நான் அறிந்து கொண்டேன். அலி ஜின்னா பிரித்தானியாவில் கல்வி கற்ற சட்டத்தரணியாக இருந்தாலும், அவர் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த தலைவர். தனது சமூகத்தினது மட்டுமல்ல உலக சமூகத்தினதும் கௌரவத்துக்கு பாத்திரமான ஒருவராவார்.நான் அவரைப் பற்றிய பல தகவல்களை கற்றறிந்தேன். அதன் மூலமாகவே நான் இந்த நூலை எழுதினேன். 

கேள்வி: பாகிஸ்தானிய சமூகத்தில் அலி ஜின்னாவுக்கு உள்ள இடம் பற்றி இந்த நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள் அல்லவா? 

பதில்: பாகிஸ்தான் மக்கள் அலி ஜின்னா இல்லாத சரித்திரத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள். இன்று பாகிஸ்தானிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் அலி ஜின்னாவின் உருவப்படத்தைக் காணலாம். பகிஸ்தானின் அடையாளமே அலி ஜின்னா என்றால் மிகையாகாது. இந்தியாவில் மகாத்மா காந்திக்கு உள்ள இடம் போன்று பாகிஸ்தானின் அலி ஜின்னாவுக்கு இடமுண்டு. பாகிஸ்தான் உருவானதும், அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் கிடைத்ததும் அலி ஜின்னாவால்தான். மக்களின் கௌரவம் அவருக்கு பாரிய அளவில் கிடைத்துள்ளது. 

கேள்வி: இந்நூலில் நீங்கள் அலி ஜின்னாவின் பாத்திரம் தொடர்பான தகவல்களை மிக எளிமையாகத் தெரிவித்துள்ளீர்கள். இப்பாத்திரத்தை எளிமையாக நூலில் கொண்டுவர நீங்கள் முகங்கொடுத்த சவால்களும் அனுபவங்களும் எவை? 

பதில்: ஒரு வருட காலத்தில் சிறிது சிறிதாக எழுதப்பட்ட இந்நூலை நான் மூன்று வருடங்கள் நெறிப்படுத்தினேன். மொஹம்மட் அலி ஜின்னா சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த தலைவர். அவரைப் பற்றி எழுதும் போது மிகவும் சிக்கலான முயற்சியை எடுப்பது போன்று, அனைத்து தகவல்களும் சரியாகவும் இருக்க வேண்டும். அதனால் நான் இந்நூலை எழுதும் போது பல தடவைகள் திருத்தங்களை மேற்கொண்டேன். வாசகர்களுக்கு உண்மையான தகவல்களை வழங்க மிகவும் முயற்சி செய்தேன். வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதும் போது பொய் எழுத முடியாது. எனது முயற்சி வெற்றியடைந்துள்ளது. 

கேள்வி: இந்நூல் இலங்கை சமூகத்துக்கு எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது? 

பதில்: இது மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ள சிறிய நூல். ஒருவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை படிக்க விரும்பும் சிறு பிள்ளைகள் கூட இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் பலரின் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கற்க விரும்பும் மாணவர்களுக்கு மிக முக்கியமானதாக அமையும். 

கேள்வி: இனவாதம் மற்றும் அதிகாரம் தொடர்பான பிரச்சினைகள் நாட்டிலுள்ள நிலையில், அலி ஜின்னாவின் பாத்திரம் மூலம் பெறக் கூடிய முன்மாதிரிகள் எவ்வகையானவை? 

பதில்: அவரின் சரித்திரம் மூலம் எடுத்துக்காட்டான பல முன்மாதிரிகள் உள்ளன. அவர் தனது மக்களுக்கு நாடொன்றை வெற்றியாகப் பெற்றுக் கொடுத்தார். நாட்டின் வளங்களை சுரண்டும் தேவை அவருக்கில்லை. ஆளுநராக அவருக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் வசதிகளை அவர் புறக்கணித்தார். அவரின் ஒரு கூற்று முழு உலகத்துக்குமே எடுத்துக்காட்டாக அமைந்தது. “நான் சாதாரண ஜின்னாவாக வாழ்கின்றேன். நான் இறக்க விரும்புவதும் சாதாரண ஜின்னாவாகத்தான். எனது பெயருக்கு பதவிப் பெயர் இல்லையென்றால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்” என மொஹம்மட் அலி ஜின்னா ஒரு முறை கூறியுள்ளார். ஆனால் சரித்திரம் அவரின் அந்த கூற்றுக்கு இணங்கவில்லை. பாகிஸ்தானின் சரித்திரம் எழுதப்படும் போது அவர் வெறும் ஜின்னா அல்ல. பாகிஸ்தான் மக்களும் அரசாங்கமும் அவரை சிரேஷ்ட தலைவர் என்னும் Quaid- I – Azam என்னும் பெயரிலேயே அழைக்கின்றார்கள். அவரின் மேற்சொன்ன கூற்றிலிருந்து தெரிய வருவதென்னவென்றால் மொஹம்மட் அலி ஜின்னா உண்மையில் எளிமையான மனிதர் என்பதாகும். அதனை இலங்கை சமூகத்துக்கு முக்கியமானதல்ல என கூறுவது எவ்வாறு? இன, மத, குல பேதமின்றி ஜின்னாவைப் பற்றிப் படிப்பது எம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

கேள்வி: சிக்கலான சமூகத்திலுள்ள மனிதர்கள் வாழ்க்கைச் சரிதங்களை வாசிக்கும் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள் என எண்ணுகின்றீர்களா? 

பதில்: சமூகத்தில் வாழ்பவர்கள் மனிதர்கள். அவர்களின் வாழ்வு எவ்வாறு சிக்கலானதாக ஆகின்றது? என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும். ஆனால் நான் புரிந்து கொண்டது உலகிலுள்ள சிரேஷ்ட மக்களின் வாழ்க்கையை சரியாக அறிந்தால் சிக்கலான மனித மனம் இலகுவானதாக மாறி விடும். புதிய எடுத்துக்காட்டுகளும் எமது வாழ்க்கையில் சேரும். இன்று என்ன நடத்துள்ளதென்றால் நல்ல வாழ்க்கைச் சரித்திரங்கள் வாசகர்களுக்கிடையே செல்வதில்லை என்பதாகும். மக்கள் பணம், அதிகாரம், பதவிகளுக்கு பின்னால் செல்வதே இந்த சிக்கல்களுக்கு காரணம். அதனால் சமூகத்தில் பெரியோர் தொடக்கம் சிறியோர் வரை அநேகமானோர் வாழ்க்கை சரித்திரங்களை மட்டுமல்ல பத்திரிகைகளைக் கூட பார்ப்பதில்லை. அதனால் பெரியோர் முதல் சிறியோர் வரை எண்ணங்களை மாற்ற வேண்டும். அதற்கான ஆயுதம் உலகில் உருவான சிரேஷ்ட தலைவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களை சமூகமயப்படுத்துவதாகும். 

கேள்வி: நீங்கள் தற்போதுள்ள சம்பிரதாயத்தை மாற்ற வேண்டும் என சொல்கிறீர்களா? 

பதில்: இன்னும் 25 வருட காலத்தை இலக்காகக் கொண்டு முறையாக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதனை செயற்படுத்தும் ஆயுதம், வாழ்க்கை சரிதங்களை வாசிக்க அளிப்பதாகும். அதுதான் எமது புரட்சியாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சமூகம் அழிவை நோக்கி மெல்ல மெல்ல செல்லும். அதனை மீட்டெடுக்கவே முடியாது.  

கேள்வி: இந்த நூலை எழுதுவதற்கு உங்களை ஊக்குவித்தவர்கள் யார்? 

பதில்: இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காரியாலய தற்போதைய பாதுகாப்பு ஆலோசகர் அஜ்ஜாட் அலி,இலங்கை பாகிஸ்தான் நட்புறவு மன்றத் தலைவர் இப்திகார் அஸீஸ் ஆகியோர் இந்நூலை பாராட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.  

தில்ரூ ஜயசேகர


Add new comment

Or log in with...