இடி, மின்னல், கனமழை; 3 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை | தினகரன்


இடி, மின்னல், கனமழை; 3 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து நீர்த்தேக்கங்களில் 24 வான்கதவுகள் திறப்பு

மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து சில தினங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கடும் காற்று, மின்னல் தாக்கம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரிக்குமென்பதனால் இக்காலப்பகுதியில் பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருப்பதாக அதன் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

நேற்று நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்தது. இதனால் புத்தளம், மன்னார் ஆகிய மாவட்டங்களின் பல வீதிகள் நீரில் மூழ்கியதுடன் அப்பகுதிவாழ் மக்கள் பாரிய அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை இன்றும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையிலும் ஊவா, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான மழையும் பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடும் மழையுடன் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் திறந்த மைதானம், நீர் நிலைகளில் இருப்பது, சைக்கிள், டிரெக்டர், படகு உள்ளிட்ட திறந்த வாகனங்களில் பயணம் செய்வது, கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள கேகாலை, இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை  மாவட்டங்களில் தொடர்ந்தும் அதற்கான எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்திருப்பதனால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 07 வான் கதவுகளும் அங்கம நீர்தேக்கத்தின் 02 வான் கதவுகளும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 06 வான்கதவுகளும் தெதுரு ஓயாவின் 08 வான்கதவுகளும் குக்குளேகங்கையின் ஒரு வான் கதவும் நேற்றும் திறக்கப்பட்டன.

இதனால் அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கடந்த 48 மணித்தியாலங்களுள் கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவல பிரதேசத்தில் 110 மில்லிமீற்றர் மழையும் கேகாலையில் 89.5 மில்லிமீற்றர் மழையும் எஹெலியகொடையில் 85 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளன. அனர்த்தங்கள் இடம்பெறின் மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் முப்படையும் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கொடிப்பிலி தெரிவித்தார்.

அனர்த்தங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் இருப்பின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் 24 மணித்தியாலங்களும் தொடர்பு கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...