புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை | தினகரன்


புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தான் நாட்டின் ஜனாதிபதியானால் புதிய மதுபான கடைகளைத் திறக்க அனுமதிப்பத்திரங்களை வழங்கப்போவதில்லை யென்றும் ஏற்கனவே பாடசாலைகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை மூடப்போவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று கூறினார்.

சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான தேர்தல் பிரகடன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெண்கள் உரிமை தொடர்பான ஜனாதிபதி செயலணி அனைத்து மாவட்ட செயலாளர் பிரிவிலும் அமைக்கப்படும். அத்துடன் போதை வஸ்து விநியோகஸ்தர்கள் மற்றும் பெண்களை பாலியல் மற்றும் ஏனைய வழிகளில் துன்புறுத்துவோர் மீதான தண்டனைகள் தனது ஆட்சியின் கீழ் அதிகரிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்காலத்தில் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பெண்களின் விகிதாசாரத்தை 25 சதவீதமாக அதிகரிப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளை, அங்கு உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார பேசும்போது,

பெண்கள் உரிமை பற்றி பேச ராஜபக்ஷ தரப்பினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று குறிப்பிட்டார். சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாட்டில் பெண்களுக்கு பொற்காலமொன்று உருவாகும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  அதேநேரம் எதிர்க்கட்சியினரின் தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுவதை கண்டித்த அமைச்சர் சந்திராணி பண்டார, அவ்வாறான தேர்தல் பிரசார செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.   


Add new comment

Or log in with...