இலக்கிய சுவையுடன் 'பூங்காவனம்' | தினகரன்


இலக்கிய சுவையுடன் 'பூங்காவனம்'

கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனத்தின் 36ஆவது இதழ் எழுத்தாளர் சுமைரா அன்வரின் அட்டைப் படத்;தைத் தாங்கி வெளிவந்துள்ளது.  இச் சஞ்சிகையில் இலக்கியச் சுவை நிரம்பிய பல ஆக்கங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

சஞ்சிகையின் நேர்காணலை பிரதம ஆசிரியர் ரிம்ஸா முஹம்மத் மேற்கொண்டு பிரபல எழுத்தாளர் திருமதி சுமைரா அன்வரிடமிருந்து பல இலக்கியத் தகவல்களையும் அவர் பற்றிய குறிப்புக்களையும் தந்துள்ளார்.

இந்த இதழில் எட்டுக் கவிதைகள் இடம்பெற்றுள்ளதுடன் எஸ்.ஆர். பாலசந்திரன், சூசை எட்வேட், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் ஆகியோர் முறையே சபலம், பெருமைக்காக, மகிழ்ச்சிப் பூக்கள் ஆகிய தலைப்புக்களில் மூன்று சிறுகதைகளை எழுதியுள்ளனர்.

ஜெனீரா ஹைருல் அமானின் குறுங்கதையும் பேராசிரியர் சபா ஜெயராசாவின் கவிதையின் மறுபக்கம் கட்டுரையும் இதழில் இடம்பிடித்துள்ளதோடு மூன்று நூல்களைப் பற்றிய மதிப்பீடுகளையும் இதழில் காணலாம்.

அட்டைப் படத்தை அலங்கரிக்கும் திருமதி. சுமைரா அன்வர் ஒரு ஆசிரியர். 33வருடங்களாக இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர்.

பட்டதாரியான இவர் இதுவரை எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், விடியலில் ஓர் அஸ்தமனம், வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும்; என்ற இரு நாவல்களையும் இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார். நூல் மதிப்பீட்டில் கலாபூஷணம் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹ{சைனின் மின்னும் தாரகைகள் நூல் பற்றி குறிஞ்சி நிலா சிறந்த குறிப்புகளை தந்துள்ளார். கவிஞர் மூதூர் முகைதீன் கடல் முற்றம் என்ற கவிதை நூலைப் பற்றிய மதிப்பீட்டினை முன்வைத்திருக்கிறார். மேலும் அஸாத் எம். ஹனிபாவின் தம்பியார் கவிதை நூல் பற்றிய மதிப்பீட்டினை தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா தந்திருக்கின்றார். நாளாந்தம் நூற்றுக் கணக்கான கவிதைகள் படைக்கப்படுகின்றன. கவிதை நூல்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இவை எல்லாம் கவிதைப் பண்புகளைக் கொண்டிருக்கின்றனவா? என்ற கேள்விக்குப் பதிலாக கவிதைக்கும் மறுபக்கம் என்று ஒன்று உள்ளது என்பதனை பேராசிரியர் சபா ஜெயராசர் கவிதையின் மறுபக்கம் என்ற கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.

ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள் என்ற கசப்பான உண்மையை கிண்ணியா ஜெனீரா ஹைருல் அமான் தனது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை குறுங்கதை மூலம் விளக்கியுள்ளார்.

மேலும்  நூலகப் பூங்காப் பக்கம் ஒன்பது நூல்களைப் பற்றிய குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன.

மொத்தத்தில் நிறைவான பல இலக்கிய அம்சங்களுடன் பூங்காவனம் வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


Add new comment

Or log in with...