நவீனத்தை பின்பற்றுதல் சிறப்பு | தினகரன்


நவீனத்தை பின்பற்றுதல் சிறப்பு

புதுக்கவிதை, மரபுக் கவிதை என்று இன்று கவிதை எழுத முன்வரும் கவிஞர்கள் தமது கவிதைகளை நவீனத்துடன் எழுத முன்வர வேண்டும்.  எதிர்பாராத விடயங்களை தமது கவிதைகளிலே தெரிவிப்பது தான் பின்னமைப்பு ஆகும். பின்னமைப்புடன் கவி படைப்பது தற்போதைய கவிஞர்களுக்கு புது உத்தியாக அமைவதுடன் கவிதைகள் சிறப்பாகவும் அமையும் என்ற கருத்தை முன்வைத்தார் சட்டத்தரணி சேனாதிராஜா.  வலம்புரி கவிதா வட்டத்தின் 61வது கவியரங்கம் கொழும்பு, ஐந்துலாம்புச் சந்தி பழைய நகர மண்டபத்தில் சிரேஷ்ட எழுத்தாளர் நாகூர்கனி தலைமையில் நடைபெற்றது. கவியரங்கில் சிறப்புரையாற்றும் போதே சட்டத்தரணி சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் “பின்னமைப்பு” என்பதற்கு விளக்கம் வழங்கினார். 

உயர்ந்த மாடியிலிருந்து ஒரு சிறுபிள்ளை தவறி கீழே விழுந்தால்..... அது கீழே விழுந்து காயப்பட்டு மரணித்துவிடும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. 

ஆனால் பூமியை நோக்கி அந்த பிள்ளை விழுந்து கொண்டிருக்கும் வேளையிலே சிறகுகள் முளைத்து பறந்து சென்று உயிர் தப்பும் வகையில் சம்பவம் நிகழ்கிறது என்றால்.... அவ்வாறு தெரிவிப்பதே பின்னமைப்பு ஆகும். 

இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் பின்னமைப்பு எதிர்பாராத சம்பவக் குறிப்புகள் இடம்பெறுவது கவிதைக்கு அழகூட்டும் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.   ‘வகவம்’ கவியரங்கு தொடர்ந்து வளர்ந்து இளம் கவிஞர்கள் பலரையும் ஊக்குவித்து அரிய சேவையாற்றி வருகிறது. தூர பிரதேசங்களில் இருந்தும் பலர் வந்து கவிபாடி வருகின்றனர். 

இம்முறை 61வது வலம்புரி கவிதா வட்ட கவியரங்களில் சுமார் 20க்கு மேற்பட்ட கவிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் கவிமழை பொழிந்தனர். 

(படம், தகவல்)
கொழும்பு மத்திய தினகரன் நிருபர்   


Add new comment

Or log in with...