ஹொங்கொங் போராட்டக் குழுவின் தலைவர் மீது மீண்டும் தாக்குதல் | தினகரன்


ஹொங்கொங் போராட்டக் குழுவின் தலைவர் மீது மீண்டும் தாக்குதல்

ஹொங்கொங்கின் மிக பெரியதொரு ஜனநாயக ஆதரவு குழுவின் தலைவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிவில் மனித உரிமை முன்னணி என்ற குழுவின் தலைவர் ஜிம்மி ஷாம் இரத்த வெள்ளத்தில் தெருவில் விழுந்து கிடப்பதை சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் காட்டுகின்றன.

பாராளுமன்றத்தில் இடையூறு செய்யப்பட்டதால், ஆண்டு கூட்ட உரையை ஹொங்கொங் நிர்வாக தலைவர் கேரி லாம் ரத்து செய்த பின்னர் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கவுலுௗன் தீபகற்பத்தின் மோங் கோக் மாவட்டத்தில் சுத்தியல்களோடு வந்த ஐந்து ஆண்கள், ஜிம்மி ஷாமை தலையில் தாக்கியதாக சிவில் மனித உரிமை முன்னணி தெரிவித்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சுய நினைவோடு இருந்த அவரது உடல் நிலை இப்போது நிலையாக இருப்பதாகவும் அது கூறியுள்ளது.

ஹொங்கொங்கில் இந்தப் போராட்டங்கள் ஆரம்பித்த பின்னர், ஜிம்மி ஷாம் தாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

ஹொங்கொங்கிற்கு அதிக ஜனநாயக உரிமைகளை வழங்க வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான மக்கள் போராட்டங்கள் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இன்னும் தென்படவில்லை.


Add new comment

Or log in with...