பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஐவர் உயிரிழப்பு | தினகரன்


பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஐவர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு கோடபடோ பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு தென்மேற்கில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கடியில் 2 கிலோ மீற்றர் ஆழத்திலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியது. இதனால் பெரும்பாலான கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் வீதியில் தஞ்சமடைந்தனர்.

துலுனன் நகரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது குழந்தையும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மாரடைப்பால் மிலங்க் நகரில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மேக்சய்சய் பகுதியில் வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையும், நிலச்சரிவில் வீடு புதைந்ததில் குழந்தை மற்றும் அதன் தாய் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கப் பாதிப்புப் பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் “ரிங் ஓப் பயர்” இன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.


Add new comment

Or log in with...