‘ரி10’ ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க உதவியாக இருக்கும் | தினகரன்


‘ரி10’ ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க உதவியாக இருக்கும்

அந்த்ரே ரஸல்

10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் முறை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இடம்பெற வைக்க உதவிகரமாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு சகல துறை வீரர் அந்த்ரே ரஸல். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலகளவில் நடைபெறும் பெரும்பாலான ரி 20 லீக்கில் விளையாடி வருகிறார். பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அடிக்கடி அனுப்பும் திறமைப்படைத்த இவர் துபாயில் நடைபெறும் 10 ஓவர் கொண்ட ‘ரி 10’ லீக்கில் விளையாடி வருகிறார்.

இந்த வருடத்திற்கான தொடர் அடுத்த மாதம் 14-ம் திகதி முதல் 24-ம்திகதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு இடம் பெறாமல் இருக்கிறது. உலகில் உள்ள கிரிக்கெட் அணிகள் அனைத்தும் பங்கேற்றால் நீண்ட நாட்கள் ஆகும் என்பதும் இடம் பெறாததற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் பிரபலமாகி வரும் ‘ரி 10’ ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடிக்க உதவியாக இருக்கும் என அந்த்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒலிம்பிக் விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெறுவது மிகவும் சிறப்பான அம்சமாகும். ஒலிம்பிக்கில் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது சொந்த நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொள்ள விரும்புவார்கள் என்பது எனக்குத் தெரியும்.

ரி 20 கிரிக்கெட்டை விட ரி 10 மிகவும் குறுகிய கால போட்டி. துடுப்பாட்ட வீரர்கள் குறுகிய நேரத்தில் விரைவாக விளையாட வேண்டும். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடலாம்.

ஒவ்வொரு டெலிவரியையும் துடுப்பாட்ட வீரர்கள் எப்படி எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து திட்டம் அமைக்க பந்து வீச்சாளருக்கும், களத்தடுப்பு அணிக்கும் சாதகமானதாக இருக்கும்’’ என்றார்.


Add new comment

Or log in with...