தமிழர்களின் எதிர்பார்ப்பும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் | தினகரன்


தமிழர்களின் எதிர்பார்ப்பும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை குறுகிய காலத்தில் திறந்து வைத்தமை போன்று அரசாங்கம் 30 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள அரசியல் தீர்வையும் விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் வேண்டுகோள்விடுத்தார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, துன்பம், துயரம், அனைத்தையும், நீக்குவதற்கு அரசியல் தீர்வு மிகவும் அவசியமானதென குறிப்பிட்ட அவர் அதனை விரைவாக அரசாங்கம் பெற்றுத் தருமென்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

நீண்டகால துன்பங்களை அனுபவித்த வடக்கு மக்களுக்கு பலாலி விமான நிலையத்தின் திறப்பு மகிழ்ச்சியளிக்கின்றது.

இந்த விமான நிலையம் பிரிட்டிஸ் ஆட்சியில் உலக மகா யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது.

கடந்த ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய தூதுவர் கலந்துகொண்ட யாழ்ப்பாண நிகழ்வொன்றில், நாம் மேற்படி விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடினோம்.

அதன் பிரதிபலனாகவே, அதன் செயற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளமை பலரும் அறியாதது.

பலாலி பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னும் மீளக் கையளிக்கப்படவில்லை.

ஜனாதிபதியுடனும், வடமாகாண ஆளுநருடனும், நான் இது தொடர்பில் இன்றும் கலந்துரையாடினேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்க ஜனாதிபதி வருகைதந்த போது அங்குள்ள கடற்றொழில் சார்ந்த குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரினேன்.

அது இன்னும் இடம்பெறவில்லை. இதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை, விமான நிலைய பகுதியில் உள்ள கார்பட் வீதி படையினரால் தடை செய்யப்பட்டுள்ளது. அதனைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

யாழிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...