பச்சோந்தியா? துரோகியா? ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு | தினகரன்


பச்சோந்தியா? துரோகியா? ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு

ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் மீது மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன் வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பகிரங்க சவால் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

நான் ஒரு பச்சோந்தி என்றும் துரோகி என்றும் பெரும் காட்டிக் கொடுப்பு என்றும் பல்வேறு வகையில் என் மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் பெட்டிப் பாம்பாக போனதாகவும் அவரே என்னை காப்பாற்றினார் என்றும் எனது பல்கலைக்கழகம் தொடர்பாக நான் பேச விரும்பவில்லை எனவும் அதில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் நான் கதைக்க விரும்ப வில்லை எனவும் ரவூப் ஹக்கீம் பேசி வருகின்றமையை நான் அவதானித்துள்ளேன். இதற்கு நான் பதிலளித்தால், முஸ்லிம் சமூகத்துக்குள்ளே ஒரு பிளவை இந்த தேர்தல் காலத்தில் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

நான் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன், இந்த சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மை என்ன, நான் எந்த வகையிலான பச்சோந்தி எவ்வாறான காட்டிக் கொடுப்புக்களை செய்தேன், எந்த வகையில் இந்த சமூகத்துக்கு துரோகம் செய்தேனா?. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பெட்டிப்பாம்பாக பேசாமல் இருந்தேனா? இந்த தேர்தலில் நான் போட்டியிடுவதன் மூலம் எவ்வாறு இந்த சமூகத்துக்கு துரோகம் இழைத்துள்ளேன். யாரைக் காட்டிக் கொடுத்துள்ளேன் என்பன போன்ற விடயங்களுக்கெல்லாம் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பேசுவதனூடாக மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். அம்பாறை மாவட்டத்திலே நீங்கள் விரும்புகின்ற ஒரு பிரதேசத்தில் விரும்புகின்ற நேரத்தில் நான் உங்களோடு பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன் என்றார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


There is 1 Comment

Add new comment

Or log in with...