தாய், மகள் கொலை வழக்கில் மரண தண்டனை | தினகரன்


தாய், மகள் கொலை வழக்கில் மரண தண்டனை

ஒரே குடும்பத்தில் தாய் மற்றும் 17 வயது மகளைக் கொடூரமாகப் படுகொலை செய்த காவத்தை கொடகேதென சம்பவம் தொடர்பிலான குற்றவாளிக்கு கொழும்பு பிரதம மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.   221 பக்கங்களைக் கொண்ட வழக்கு பதிவை வெளியிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.  

குற்றவாளிக்கு எதிராக சட்ட மாஅதிபர் சுமத்தியிருந்த இரண்டு குற்றங்களுக்கும் ஆதாரபூர்வமான சாட்சிகள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை சாட்சிகளும் நிருபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளியான லொக்குகம் கேவகே தர்ஷன கெவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.  

கண்களால் கண்ட சாட்சி எவரும் இல்லாத நிலையிலும் ஏனைய சாட்சிகள் மற்றும் டிஎன்ஏ ஆதார சாட்சி மூலம் சட்ட மாஅதிபர் இரு குற்றங்களை குற்றவாளிக்கு எதிராக சுமத்தி வழக்கை தொடுத்திருந்தார்.  

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, 2012 ஜனவரி 31ம் திகதி கொடகெதென விகாரை வீதியில் வசித்த நயனா நில்மினி என்ற 52 வயது தாயையும் 17 வயதான மகள் காவிந்தியா சத்துரங்கி செல்வஹேவாவும் படுகொலை செய்யப்பட்டனர்.  

இது தொடர்பில் குற்றவாளிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட லொக்குகம்கேவகே தர்ஷன கெவன் ராஜு மற்றும் அவரது மனைவி அசோக்கா சாந்தனி ஹெவன் பட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.  

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி வழக்கு விசாரணைகளின்போது சாட்சிகளின் வாக்குமூலம் நிறைவுற்ற நிலையில் இரண்டாவது பிரதிவாதியான அசோக்கா சாந்தனி ஹெவன் பட்டி குற்றங்கள் நிருபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். எனினும், முதலாவது குற்றவாளியான லொக்குகம் ஹேவகே தர்ஷன கெவனுக்கு எதிரான வழக்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது.  

நீண்ட விசாரணைக்கு பின் வழக்கு தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தாயையும் மகளையும் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார் என்பது நிருபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. (ஸ)   


Add new comment

Or log in with...