தற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதலாம் இடத்தில் | தினகரன்


தற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை முதலாம் இடத்தில்

தற்கொலை இடம்பெறும் நாடுகளில் 2018 ஆம் ஆண்டு இலங்கை முதலாம் இடத்தில் இருப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக உளவியல் உளவளத் துணையாளர் மனூஸ் அபூபக்கர் தெரிவித்தார். 

உலக மனநல தினத்தையொட்டி பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில்  நேற்றுமுன்தினம் (14) நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இலங்கையில் தற்போது தற்கொலை 35.3 வீதம் காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

உலகில் 15 வயது தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்கள்  ஒவ்வொரு 40 செக்கனுக்கும் ஒருவர் தற்கொலை செய்கின்றார். ஒரு ஆண்டுக்கு 08 இலட்சம் பேர் தற்கொலை செய்கின்றார்கள்.  இலங்கையில் 2018 ஆண்டிலிருந்து இதுவரைக்கும் 75 சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  தற்போது தற்கொலைகள் அதிகரிப்பதற்கான காரணம் நுண் கடன் திட்டமாகும் இதனால் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள். தற்கொலைகளை குறைப்பதற்கு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். போதைப் பொருள் பாவனையினாலும் தற்கொலைகள் அதிரிக்கின்றன. 

இலங்கையில் சமீப காலமாக குழு மோதல்கள் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தல் வேண்டும்.  பாடசாலைகளில் தேசிய உளவள துணை தினம் மற்றும் சர்வதேச மனநல தினம் என்பவற்றை கொண்டாடுமாறு கல்வியமைச்சு சகல பாடசாலைகளுக்கும் சுற்றுநிரூபம் அனுப்பி வைத்துள்ளது. இதற்கமைவாகவே இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக பெற்றோர்களும், ஆசிரியர்களும்  விழிப்புணர்வூட்ட வேண்டுமென்றார். 

(ஒலுவில் விசேட நிருபர்)


Add new comment

Or log in with...