தேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும் | தினகரன்


தேர்தல் மேடைகளில் கல்வித் தேவை மையப்படுத்தப்பட வேண்டும்

தற்போதைய தேர்தல் மேடையில் கல்வித்தேவைகள் பிரதானமாக மையப்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.  

பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் தேசிய மக்கள் சக்தியின் கல்விக் கொள்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  

தற்போதைய தேர்தல் மேடையில் பிரசாரம் செய்யும் பலர் சேறு பூசும் பிரசாரத்தையே மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக கல்விப் பிரசாரமே மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருநாடாக நாம் முன்னே செல்ல வேண்டுமானால் அதற்கான ஒரேயொரு ஆயுதம் கல்வியாகும். எமது நாட்டில் பலவாறான வர்த்தக வளங்கள் இல்லை. மனித வளம் மட்டுமே எமக்கு இருக்கிறது. அந்த நிலையில் எமது நாட்டின் பொருளாதார தந்திரோபாயத்தில் கல்வி பிரதானமானதாகும் என்று அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறினார்.  

சிறுவர்கள் இப்போது பாடசாலைகளுக்கு செல்வது படிப்பதற்கு அல்ல. பழக்க தோஷத்தினாலேயே, அவர்கள் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். இது முறையாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்போது கல்வியானது உங்கள் பையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ற வர்த்தகப் பொருளாக மாறியுள்ளது. பல்லின பல்மத சமூகங்களுக்கிடையே தேசிய மக்கள் சக்தி இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விசேட திட்டங்களை உள்ளடக்கிய கொள்கையை முன்வைக்கிறது. ஒரு பிள்ளையின் தாய்மொழியைத் தவிர மற்றொரு மொழியும் கற்றுத்தரப்படும். அத்துடன் ஆங்கிலமும் கற்றுத்தரப்படும். இதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.      


Add new comment

Or log in with...