Thursday, April 25, 2024
Home » இலங்கை, இந்திய நட்புறவை உறுதிப்படுத்தும் அறிவிப்பு

இலங்கை, இந்திய நட்புறவை உறுதிப்படுத்தும் அறிவிப்பு

by damith
February 13, 2024 6:00 am 0 comment

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகவும் நீண்டகால நட்புறவு நிலவி வருகிறது. மிகவும் தொன்மையான காலத்தில் இரு நாடுகளும் நிலரீதியில் ஒன்றாக இணைந்திருந்துள்ளதாக நம்பப்படுகிறது.

அதேநேரம் அயல்நாடு என்ற அடிப்படையில் மாத்திரமல்லாமல் சமய, கலாசார, பொருளாதார ரீதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மிகவும் நெருக்கமான முறையில் காணப்படுகிறது. இரு நாட்டு மக்களும் கூட நெருக்கமான உறவைப் பேணி வருகின்றனர். அந்தளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமானதும் இறுக்கமானதுமான உறவு உள்ளது.

இலங்கை நெருக்கடிகளுக்கு உள்ளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலில் உதவிக்கு வரும் நாடாக இந்தியா இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை இந்தியா அண்மைக் காலமாக முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுத்து வருகிறது. அக்கொள்கையின் அடிப்படையிலும் இலங்கைக்கு அதிக உதவி, ஒத்துழைப்புக்களை நல்கும் நாடாக இந்தியா விளங்குகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நெருக்கடியின் போது முதலில் உதவி, ஒத்துழைப்புக்களை நல்க முன்வந்த தேசமாக விளங்கும் இந்தியா, குறுகிய காலப்பகுதிக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியது. இது ஒரு பாரிய ஒத்துழைப்பாகும். அவ்வாறானதொரு உதவி, ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றிராவிட்டால் இலங்கையினால் அப்பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலப்பகுதிக்குள் மீட்சி பெற்று இருக்க முடியாது.

அதன் விளைவாக நாடு மாத்திரமன்றி மக்களும் மிக மோசமான பாதிப்புக்களுக்கு உள்ளாகி இருப்பர். அவ்வாறான துரதிர்ஷ்டகர நிலைக்கு உள்ளாவதைத் தவிர்த்துக் கொள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு பெரிதும் உதவியாக அமைந்திருந்தது. இதனை நாட்டின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிபடக் குறிப்பிட்டு இந்தியாவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இப்பின்புலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவில் மேலும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இருநாடுகளும் மிக நெருக்கமானதும் பலமானதுமான பொருளாதார உறவுகளுக்கு வித்தூன்றி வருகின்றன. இந்த அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலரீதியிலான இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாலம் அமைப்பது குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இதேவேளை ஒருங்கிணைந்த கட்டண முறையும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் உட்பட சகல துறைகளிலும் நட்புறவு மென்மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான சூழலில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை அனுமதிக்காது என்று மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு, ‘சீனாவில் இருந்து வருபவை நீரியல் கப்பல்களாகும். அவற்றுக்கு நாம் அனுமதி வழங்குகின்றோம். அதேபோன்று ஏனைய நாடுகளில் இருந்து வரும் கப்பல்களுக்கும் அனுமதி அளிக்கிறோம். எமது நீரியல் திறன்களை மேம்படுத்திவதே எமது இலக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு இலங்கை இந்தியாவுடன் எவ்வளவு தூரம் நெருக்கமானதும் இறுக்கமானதுமான உறவைக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டக் கூடியதாக உள்ளது.

இந்தியா, இந்நாட்டுக்கு அயல்நாடாக இருக்கின்ற போதிலும், பல்துறைகளிலும் பாரிய முன்னேற்றங்களை அடைந்து கொண்டுள்ளது. அந்த முன்னேற்றங்களின் பயன்களை இலங்கையும் அடைந்து கொள்கிறது. குறிப்பாக இலங்கைக்கு எப்போதும் பக்கபலமாக இருந்துவரும் தேசமாக இந்தியா இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு இறுக்கமானதும் உறுதியானதுமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் பேணும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தக் காரியத்திற்கும் இலங்கை எந்த வகையிலும் துணை போகாது. அதனை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த நல்லுறவும் ஒத்துழைப்பும் நீடித்து நிலைக்க வேண்டும். அது நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார மேம்பாட்டுக்கு பக்கத்துணையாக அமையும். மக்களின் விருப்பமும் அதுவேயாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT