விலைமதிப்பற்ற விசுவாசம் | தினகரன்


விலைமதிப்பற்ற விசுவாசம்

விலைமதிப்பற்ற விசுவாசம் என்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் நிகழ்வுகள் நற்செய்தியில் வழங்கப்பட்டுள்ளன. இவை வாழ்வுக்குத் தேவையான சில பாடங்களைச் சொல்லித் தருகின்றன.

தொழுநோயால் துன்புற்ற  சிரியா நாட்டுப் படைத்தலைவன் நாமான், இஸ்ரயேல் நாட்டில் வாழும் கடவுளின் அடியவரான எலிசாவைத் தேடிச் செல்கிறார். "அந்நாட்களில், நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க, யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ அவர் நலமடைந்தார்" (2அரசர்கள் 5: 14) என்று நற்செய்தி வாசகம் தெரிவிக்கிறது.

 படைத்தலைவன் நாமான் உடலளவில் நலம் பெறுவதற்குமுன், ஆணவம், கோபம் என்ற மன நோய்களிலிருந்து அவர் நலம்பெற வேண்டியிருந்தது. பண பலத்தைப் பயன்படுத்தி தன் உடல் நலனை வாங்கிவிட முடியும் என்ற மமதையோடு சிரியா நாட்டிலிருந்து, இஸ்ரயேல் நாட்டிற்குச் சென்ற நாமான், முற்றிலும் மாறவேண்டியிருந்தது. ஏறத்தாழஅவர் மறுபடியும் பிறக்க வேண்டியிருந்தது.

 இதைத்தான் நறசெய்தி வாசகம் அழகாகச் சித்திரிக்கிறது. யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழுந்த நாமானின் "உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறியது" (2அர. 5:14) என வாசிக்கிறோம்.

அவர் யோர்தானுக்குச் செல்லும் முன்னரே தன் பணியாளர்களின் ஆலோசனைகளுக்குச் செவிமடுத்து ஒரு குழந்தையைப்போல் தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டதால் ஒரு சிறு பிள்ளையைப் போன்ற உடலையும் அவரால் பெறமுடிந்தது. நம் மனநலனைப் பாதிக்கும் ஆணவம் போன்ற நோய்களை அகற்றுவது நம் உடலுக்கும் நலன் தரும் என்பதை நாமான் நமக்குச் சொல்லித் தருகிறார்.

ஆணவத்தோடு படைத்தலைவனாக தன் வீட்டுக்கு முன் வந்து நின்ற நாமானைச் சந்திக்க மறுத்த இறைவாக்கினர் எலிசா குழந்தை மனதோடும் சிறு பிள்ளையையொத்த உடலோடும் யோர்தானிலிருந்து திரும்பி வந்த நாமானைச் சந்திக்கிறார்.

சிரியாவிலிருந்து நாமான் புறப்பட்டபோது உடலில் தொழுநோயையும் உள்ளத்தில் ஆணவத்தையும் உடன் வந்தவர்கள் வழியே தன் செல்வச் செருக்கையும் சுமந்து சென்றார். அவர் சிரியாவுக்குத் திரும்பிச் சென்றபோது உடலிலும் உள்ளத்திலும் முழு நலம் பெற்று இஸ்ரயேல் நாட்டின் மண்ணைச் சுமந்து சென்றார்.

தான் கொண்டு செல்லும் செல்வத்தைக்கொண்டு இறைவனையே விலைபேச முடியும் என்ற மமதையுடன் சென்ற நாமான் விலைமதிப்பற்ற விசுவாசம் என்ற கொடையைப் பெற்றுத் திரும்பினார். தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவர் உண்மையான நன்றி உணர்வுடன் வாழ்ந்திருப்பார் என்று நம்பலாம்.

நற்செய்தியில் நாம் சந்திக்கும் மற்றொரு தொழுநோயாளர் நன்றி உணர்வு கொண்டவர் என்று இயேசுவிடம் பாராட்டு பெறுகிறார். நன்றியுணர்வைப்பற்றி சொல்லித்தருவது இப்பகுதியின் முக்கிய நோக்கம் எனினும் மற்றும் சில முக்கியமான பாடங்களும் நற்செய்தியின் வழியே நம்மை வந்தடைகின்றன.

நற்செய்தியின் அறிமுக வரிகளிலேயே நம் பாடங்கள் ஆரம்பமாகின்றன. இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். (லூக்கா 17:11) என்ற கூற்றுடன் அந்த நற்செய்தி ஆரம்பமாகிறது.

புனித நகரான எருசலேம் நோக்கிச் செல்வது இஸ்ரயேல் மக்களின் இலக்காக இருந்தது. இந்தப் புனிதப் பயணத்தில் சமாரியர்கள் வாழும் பகுதி குறுக்கிடும் வேளையில் அப்பகுதியில் காலடி பதித்து தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாமல் அதைச் சுற்றிச் செல்வது இஸ்ரயேல் மக்களின் வழக்கம். இயேசுவோ கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார் என்று நற்செய்தி தெளிவாகக் கூறுகிறது.

அர்த்தமற்ற பாகுபாடுகளுடன் வாழும் யூதர்களையும், சமாரியர்களையும் ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கத்துடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும். அந்நேரம்  பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தொழுநோய் என்ற ஒரே காரணத்தால் யூத சமுதாயமும் சமாரிய சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்தப் புறக்கணிப்பு அவர்களை இணைத்தது!

நோய், நொடி, துன்பம், பேரழிவு என்று வரும்போது, மனித சமுதாயம் பலவழிகளில் இணைந்துவிடுகிறது.

தொழுநோய் என்ற துன்பம், பாகுபாடுகளை மறந்து, பத்து நோயாளிகளை சேர்த்து வைத்தது. ஆனால் தொழுநோய் நீங்கியதும் என்ன நடந்திருக்கும் என்பதை, நாம் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். "அவர்கள் புறப்பட்டு போகும்போது, அவர்கள் நோய் நீங்கிற்று. நோய் நீங்கியதை உணர்ந்த ஒருவர், உரத்தக் குரலில் கடவுளைப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார். அவர் ஒரு சமாரியர்"(லூக்கா 17: 15) என்று நற்செய்தி கூறுகிறது.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தால், ஒரே குலமாய் இருந்த பத்து பேரும், நோய் நீங்கியதும் யூதர் என்றும் சமாரியர் என்றும் பிரிந்தனர். அவர்கள் மத்தியில் ஒரு சமாரியர் இருந்ததை அவர்கள் மீண்டும் உணர்ந்தனர். "நீங்கள் போய், உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்"(லூக்கா 17: 15) என்று இயேசு சொன்னதை நினைத்துப் பார்த்தனர். (மிகுதி அடுத்த வாரம்)

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...