இந்திய அருளாளர் மரியம்தெரேசியா உட்பட ஐந்து அருளாளர்கள் புனிதர்களாகினர் | தினகரன்


இந்திய அருளாளர் மரியம்தெரேசியா உட்பட ஐந்து அருளாளர்கள் புனிதர்களாகினர்

இந்திய அருளாளர் மரியம் தெரேசியா 1909ம் ஆண்டில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார். இவர் 1914ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார்.

அக்டோபர் 13ம் திகதி  கடந்த ஞாயிறன்று இந்தியாவின் மரியம் தெரேசியா  உட்பட ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் கிறிஸ்தவ சமுகம்  சாட்சிய வாழ்வு வழியாக புனிதராக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார்.

மேரி தெரேசா“மகிழ்வான கிறிஸ்தவ வாழ்விற்குச் சான்று பகர்வதன் வழியாக நம் சமுதாயம் புனிதர் நிலைக்கு அழைக்கப்பட்டிருப்பதைக் கண்டுணருமாறு செபிப்போம்” என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு காலை  வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கேரளாவின் மரியம் தெரேசியா, பிரித்தானியாவின் கர்தினால் John Henry Newman,  சுவிட்சர்லாந்து பொதுநிலை விசுவாசி Marguerite Bays, இத்தாலியின் Giuseppina Vannini, பிரேசில் நாட்டு Dulce Lopes ஆகிய ஐந்து அருளாளர்களை புனிதர்களாக அறிவித்தார்  திருத்தந்தை .

அருளாளர் அன்னை மரியம் தெரேசியா

1876ம் ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி கேரளாவின் Puthenchiraவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த  அருளாளர் அன்னை மரியம் தெரேசியா அவர்கள், 1909ம் ஆண்டில் ஐந்துகாய வரம் பெற்றிருந்தார். ஆழ்நிலை தியான யோகியாகிய இவர் சாத்தானின் சோதனைகளால் கடுமையான துன்பங்களை அனுபவித்தவர்.

 1914ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இவர் ஆரம்பித்த திருக்குடும்ப அருட்சகோதரிகள் சபை தற்போது 176இல்லங்களில் 1,500அருட்சகோதரிகளைக் கொண்டிருக்கின்றது.

 ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர் மீது மிகுந்த அக்கறை காட்டிய இவர், தனது 50வது வயதில் 1926ம் ஆண்டு ஜூன் 8ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

அருளாளர் கர்தினால் நியூமன்

பிரித்தானியாவைச் சேர்ந்த அருளாளர் கர்தினால் John Henry Newman (21,பிப்.1801– 11ஆக.1890) இறையியலாளர் மற்றும் கவிஞர். இங்கிலாந்து அங்கிலிக்கன் சபையில் முதலில் இணைந்து பின்னர் கத்தோலிக்க அருட்பணியாளராகி பின்னர் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர். இங்கிலாந்தில் பிலிப்புநேரி போதகர் சபையைத் தொடங்கியவர்.

அருளாளர் மார்கரைட் பேஸ்

19ம் நூற்றாண்டு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுநிலை விசுவாசியான அருளாளர் Marguerite Bays திருமணம் செய்துகொள்ளாமலும், துறவு சபையில் இணையாமலும் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து மறைக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆடைகள் நெய்யும் தொழில் செய்த இவர் 1879ம் ஆண்டு தனது 63வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

அருளாளர் வென்னினி

19ம் நூற்றாண்டில் உரோம் நகரில் பிறந்த அருளாளர் அன்னை Giuseppina Vannini  நோயாளிகள் மற்றும், துன்புறுவோருக்கென புனித கமில்லஸ் புதல்வியர் சபையை ஆரம்பித்தவர்.

கடந்த 400ஆண்டுகளுக்குப் பின் உரோம் நகரில் பிறந்த ஒருவர் புனிதராக அறிவிக்கப்படவிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

அருளாளர் லொப்ஸ்

1914ம் ஆண்டில் பிரேசிலின் Salvador de Bahiaல் பிறந்த அருட்சகோதரி அருளாளர் Dulce Lopes இரண்டுமுறை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். தனது 16வது வயதிலேயே தனது இல்லத்தில் வயதானவர்களையும் நோயாளிகளையும் பராமரித்து வந்தவர்.

அருளாளர் Lopes  முப்பது ஆண்டுகளாக மூச்சுத்திணறல் நோயால் துன்புற்று 1992ம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார். பிரேசிலில் பிறந்த பெண் ஒருவர் புனிதராக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இவரது உடல் அழியாமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டபின் 2011ம் ஆண்டில் இவர் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.   

மேரி தெரேசா


Add new comment

Or log in with...